கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக அதிகரிப்பு

 
கள்ளச்சாராயம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகில் உள்ள எக்கியார் கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதனை வாங்கிக் குடித்த அந்த கிராமத்தை சேர்ந்த 16 பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து, கள்ளச்சாராயம் குடித்த 16 பேரும் முண்டியபாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை என அருகே உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய 3 பேரும் சிகிச்சை பலனின்றி   உயிரிழந்தனர்.

மேலும் பலர் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்தனர். அவர்களில் இன்று மதியம் ராஜமூர்த்தி (55) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் கள்ளச்சாராயம் குடித்து  உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.  இந்நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. 60 வயது மூதாட்டி மலர்விழி சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே கள்ளச்சாரயம் விற்பனையை கண்டுகொள்ளாது இருந்த மரக்காணம் காவல் ஆய்வாளர் அருள் வடிவேன் அழகன் மற்றும் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் மரிய சோபி மஞ்சுளா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.