அருணாசலபிரதேசத்தில் லாரி கவிழ்ந்து விபத்து: பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு..!
அசாம் மாநிலம் சேர்ந்த 22 தொழிலாளர்கள், அருணாச்சலப் பிரதேச மாநிலம் அஞ்சாவ் மாவட்டத்தில் உள்ள ஹயுலியாங்கில் நடைபெற்று வரும் ஒரு விடுதி கட்டுமானப் பணிக்காக லாரி ஒன்றில் பயணித்துள்ளனர். கடந்த டிசம்பர் 10-ஆம் தேதிக்குள் இவர்கள் ஹயுலியாங்கை அடைந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் குறித்த நேரத்தில் வராததால், அவர்களைக் காணவில்லை என அவர்களது சக தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
காணாமல் போன தொழிலாளர்களைக் கண்டுபிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையைத் தொடங்கியபோது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புத்தேஸ்வர் தீப் என்பவர் அளித்த தகவலின் மூலம் லாரியில் வந்த தொழிலாளர்கள் விபத்தில் சிக்கியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ராணுவம், போலீசார் மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து சென்று, ஹயுலியாங் - சக்லகம் சாலையில் உள்ள குறுகிய மலைப்பாதையின் ஓரிடத்தில் பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த லாரியைக் கண்டறிந்தனர்.
விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்ட மீட்புப் படையினர் விபத்தில் சிக்கிய தொழிலாளர்களின் உடல்களை மீட்டனர். விபத்து நடந்த ஆரம்பத்தில் 18 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியான நிலையில், பலி எண்ணிக்கை தற்போது 21 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 19 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும், பலியான 21 தொழிலாளர்களில் 18 பேர் ஒரே பகுதியினைச் சேர்ந்தவர்கள் என்பது சோகத்தை அதிகப்படுத்தியுள்ளது.
விபத்தில் லாரியில் இருந்த புத்தேஸ்வர் தீப் என்பவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பி உள்ளார். அவர் தட்டுத்தடுமாறி ஹயுலியாங் நகரை அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். காயமடைந்த புத்தேஸ்வர் தீப், விபத்து நடந்த இடத்தில் 'நெட்வொர்க் இல்லாததாலும், செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டதாலும் என்னால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை' என்று தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்கள் சென்ற லாரி, அஞ்சாவ் மாவட்டத்தில் உள்ள சீன எல்லையை நோக்கிச் செல்லும் ஹயுலியாங் - சக்லகம் சாலையின் குறுகிய மலைப்பாதையில் பயணித்தபோது நிலைதடுமாறியது தெரியவந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் ஓரத்தில் இருந்த சுமார் 1,000 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் லாரி சுக்குநூறாக நொறுங்கியதில் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த பயங்கர விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


