டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுக்கு காத்திருப்போருக்கு அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்த மகிழ்ச்சி செய்தி

முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான், எம்ஆர்க் ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான CEETA மற்றும், எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான டான்செட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் பிப்.26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் முதுகலை தொழிற்கல்விப்படிப்புகளில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வு அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு மூலம் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கும், முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிளான் ஆகியவற்றிற்கு ( CEETA-PG )நுழைவுத் தேர்வு தனித்தனியாக நடத்தப்படுகிறது. இந்தாண்டிற்கான தேர்வு குறித்து அண்ணா பல்கலைக் கழக பொதுநுழைவுத்தேர்வு செயலாளர் ஸ்ரீதரன் ஜன.23ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான். ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான CEETA மற்றும், எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வுவிற்கு (டான்செட்2025 ) நாளை (ஜனவரி 24ந் தேதி) முதல் https://tancet.annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும், MCA ,MBA படிப்புகளுக்கு எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினருக்கு 500 ரூபாயும், பிற வகுப்பினருக்கு 1000 ரூபாயும் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு மார்ச் 22 தேதி நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CEETA, எம் .இ , எம்டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய முதுகலை பொறியியல் படிப்புகளுக்கு எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினருக்கு 900 ரூபாயும், இதரபிரிவினருக்கு 1800 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். இதில் கலந்தாய்வு கட்டணமும் அடங்கும். இவர்களுக்கான நுழைவுத்தேர்வு மார்ச் 23ம் தேதி நடைபெறுகிறது. https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் மாணவர்கள் கட்டணங்களை செலுத்த வேண்டும். இதே இணையதள முகவரியில் தேர்வுக்குரிய ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகள்,சுயநிதிக் கல்லூரிகளில் நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும்.
பிஇ, பிடெக் பட்டத்தை தொலைத்தூரக்கல்வி மூலமோ அல்லது வார இறுதி நாட்களில் நடைபெறும் வகுப்பு மூலமோ பயின்றவர்களுக்கு நுழைவுத்தேர்வினை எழுத தகுதியில்லை. மேலும் 10,12 ம் வகுப்பு, 3 ஆண்டு டிப்ளமோ படித்தவர்களுக்கும் எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிளான் படிப்பில் சேர தகுதியில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான பாடத்திட்டம் மற்றும் வினா விடைகளுக்கு அளிக்கப்படும் மதிப்பெண் விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. நுழைவுத்தேர்வு சென்னை, கோயம்புத்தூர்,சிதம்பரம், திண்டுக்கல், ஈரோடு, காரைக்குடி, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, வேலூர், விழுப்புரம், பாகூர் ஆகிய 15 இடங்களில் நடைபெறும். மேலும் விபரங்களை பெறுவதற்கு செயலாளர், தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு , நுழைவுத்தேர்வு மையம், அண்ணா பல்கலைக் கழகம், சென்னை என்ற முகவரியிலோ அல்லது 044-2235 8289 , 044-2235 8314 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புக் கொள்ளலாம்.
மாணவர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் அதன் அடிப்படையில் தான் சேர்க்கை நடைபெறும் எனவும், பிப்ரவரி 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்றுடன் முடிவடைய இருந்த விண்ணப்ப பதிவு மாணவர்களின் கோரிக்கையை ஏற்று பிப்ரவரி 26ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு இந்த நுழைவுத்தேர்வுகளை 39,301 மாணவர்கள் எழுதிய நிலையில் இந்த ஆண்டு அதிகமான மாணவர்கள் எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.