SIR படிவங்களை சமர்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவு- 80 லட்சம் பேர் நீக்கம்?
தீவிர சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவங்களை சமர்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைந்தது.

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியை, தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. இதன்படி, முதல் கட்டமாக வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றது. மேலும் கணக்கீட்டு படிவங்களை நிரப்பி சமர்பிப்பதற்கான கால அவகாசம் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது. இதன்படி பொதுமக்கள் டிசம்பர் 14ம் தேதிவரை கணக்கீட்டு படிவங்களை நிரப்பி சமர்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் எஸ்ஐஆர் படிவம் விநியோகப் பணி 100 சதவீதம் முடிவடைந்துள்ளது. அதாவது, 6 கோடி 41 லட்சத்து 13 ஆயிரத்து 772 பேருக்கு படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. அதேபோல, கணக்கீட்டுப் படிவங்களை பதிவேற்றும் பணியும் 100 சதவீதம் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில், வரும்19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 80 லட்சம் பேர் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி, 26 லட்சம் பேர் இறந்தவர்கள், 9 லட்சம் பேர் கண்டுபிடிக்கப்பட முடியாதவர்கள் அல்லது ஆப்செண்ட் ஆனவர்கள், 41லட்சம் பேர் நிரந்தரமாக இடம் மாறிச் சென்றவர்கள், 4 லட்சம் இரட்டை பதிவுகள் என்று மொத்தம் 80 லட்சம் பேர் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் டிச.19-ம் தேதி முதல் ஐனவரி 18ம் தேதி வரை ஆட்சேபங்கள் இருந்தால் தெரிவிக்கலாம். வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் அல்லது ஏற்கெனவே உள்ள பதிவுகள் குறித்து மறுப்பு தெரிவிக்கலாம். பின்னர், அதுகுறித்த பரிசீலனைகள் நடைபெறும். இதனைத் தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17ம் தேதி வெளியாகும்.


