கல்லூரிக்கு சென்ற இளம்பெண் சடலமாக முட் புதருக்கள் கண்டெடுப்பு
நாகையில் கல்லூரியில் சான்றிதழ் வாங்கி வருவதாக சென்ற தனியார் மருத்துவமனை செவிலியர் சிக்கல் அருகே கருவை காட்டு முட் புதருக்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் தையான் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவரது நான்காவது மகள் சுஸ்மிதா. 23 வயதான இவர் நர்சிங் படித்து முடித்துவிட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் வேலைப் பார்த்து வந்தார். இந்த நிலையில் சென்னையிலிருந்து விடுமுறைக்கு வந்து ஊரில் தங்கி இருந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 30 ம் தேதி நர்சிங் படித்த நாகையில் உள்ள கார்த்திகேயன் நர்சிங் கல்லூரிக்கு சான்றிதழ் வாங்கி வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் திரும்ப வீட்டிற்கு வரவில்லை என்று கூறப்பட்டது.
இதனால் அவரது பெற்றோர், உறவினர் வீடு, வேலை பார்த்த இடத்தில் விசாரித்த போது அங்கும் அவர் செல்லவில்லை என்பதால் கீழையூர் காவல் நிலையத்தில் கடந்த 3 ம் தேதி மகளை காணவில்லை என புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் சிக்கல் கீழவெளி பகுதி கருவை காட்டு முட்புதருக்குள் அழுகிய நிலையில் பெண் இறந்து கிடப்பதாக விறகு வெட்ட போன அப்பகுதி பெண்கள் கீழ்வேளூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து காவல் ஆய்வாளர் தியாகராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். முட்புதருக்குள் அழுகிய நிலையில் கிடந்த பெண்ணின் உடலை மீட்டு உடல் கூறாய்வுக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மகளை காணவில்லை என்று புகார் கொடுத்த பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இறந்து கிடந்த பெண் தங்களது மகள் சுஸ்மிதா எனவும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கீழையூர் அதே பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரும் , சுஸ்மிதாவும் காதலித்து வந்ததாகவும் பார்த்திபனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் முடிந்துள்ளதாவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 1-ம் தேதி பார்த்திபன் அந்தனைப்பேட்டை பகுதியில் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். சுஸ்மிதா இறந்த கிடந்த பகுதியில் இருந்து 1 கிலோ மீட்டர் இடைவெளியில் பார்த்திபன் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துக் கொண்டதால் காதலி சுஸ்மிதாவை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துக் கொண்டாரா? அல்லது காதலி தற்கொலை செய்துக் கொண்டதால் இவர் தற்கொலை செய்துக் கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.