தயாநிதி மாறன் வழக்கு; நீதிமன்றத்தில் ஆஜரான எடப்பாடி பழனிசாமி - நடந்தது என்ன?
திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்காக,எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து பிரச்சாரம் செய்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய சென்னை எம்.பி.யாக இருந்த தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை எனக் கூறிருந்தார். இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
தன் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் தவறான குற்றச்சாட்டை கூறியுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். தொகுதி நிதியில் 95 சதவீதம் பயன்படுத்தியதை குறிப்பிட்டு அது இணையதளத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். எனவே எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றவியல் அவதூறு வழக்கில் உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள். மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயவேல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் அவதூறு குற்றச்சாட்டை மறுப்புதாகவும், வழக்கை சந்திக்க தயார் என்றும் தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி செப்டம்பர் 19ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்..