மாந்திரீகம் செய்வதாகக் கூறி மருமகள் கழுத்தறுத்துக் கொலை! -கௌரவக் கொலையில் சிக்கிய மாமியார்..!

 
1 1

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே, மாந்திரீகம் செய்வதாகக் கூறி மருமகளைக் கழுத்தறுத்துக் கொலை செய்த மாமியாரின் வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நந்தினி (29), தனது முதல் கணவர் மறைவிற்குப் பிறகு, மரிய ரொசாரியோ என்பவரைக் காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணம் மரிய ரொசாரியோவின் தாய் கிறிஸ்தோப்மேரிக்கு விருப்பமில்லாததால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தனது மகனுக்கு வேறு திருமணம் செய்து வைக்கத் திட்டமிட்ட கிறிஸ்தோப்மேரி, மருமகளைத் தீர்த்துக் கட்டத் தனது தோழி எமிலியுடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டியுள்ளார்.

கொலைத் திட்டத்தை அரங்கேற்ற, கடந்த நான்கு மாதங்களாக மருமகள் நந்தினியிடம் கிறிஸ்தோப்மேரி மிகுந்த அன்பு பாராட்டுவது போல் நடித்துள்ளார். கடந்த 29-ஆம் தேதி அதிகாலை, குடும்பப் பிரச்சினைகள் தீரக் கோவிலில் மாந்திரீகம் செய்ய வேண்டும் என்று ஆசை வார்த்தை கூறி நந்தினியை மணிமுக்தா ஆற்றின் கரையோரம் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பூஜையில் அமர வைத்து, கண்ணை மூடிக்கொள்ளச் சொல்லிவிட்டு, மறைத்து வைத்திருந்த கத்தியால் நந்தினியின் கழுத்தை அறுத்துத் தலையைத் துண்டித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர் உடலையும் தலையையும் வெவ்வேறு இடங்களில் புதைத்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

நந்தினியைக் காணவில்லை என அவரது கணவர் மரிய ரொசாரியோ காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, சங்கராபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் கிறிஸ்தோப்மேரி மற்றும் அவரது தோழி எமிலி ஆகியோர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகம் வலுத்தது. இறுதியில், கௌரவம் மற்றும் குடும்ப அமைதி என்ற பெயரில் இந்த கொடூரக் கொலையைச் செய்ததாக இருவரும் ஒப்புக்கொண்டனர். தற்போது இருவரையும் கைது செய்துள்ள போலீசார், ஆற்றங்கரையில் புதைக்கப்பட்ட நந்தினியின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.