மகள் காதல் திருமணம்- கல்லூரிக்குள் புகுந்து தாக்கிய பெற்றோர்

காதல் திருமணம் செய்த பெண்ணை கல்லூரி புகுந்து தாக்கிய பெற்றோரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா மாவலிப்பட்டியை சேர்ந்த தனராஜ், இவரது மகள் சுபஸ்ரீ (20). இவர் ஆராய்ச்சி சமத்துவபுரத்தை சேர்ந்த பாலாஜி என்பவரை காதலித்து அண்மையில் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தட்டச்சு தேர்வு எழுதுவதற்காக இமயம் கல்லூரிக்கு வந்துள்ளார். கல்லூரி வளாகத்தில் தேர்வு எழுதி விட்டு வந்த சுபஸ்ரீயை பெற்றோர் தங்களுடன் வருமாறு கட்டாயப்படுத்தி அழைத்ததாக தெரிகிறது. சுபஸ்ரீ அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவரைத் தாக்கி அவரின் கழுத்தில் இருந்த தாலியை அறுத்து எறிந்ததாக கூறப்படுகிறது.
உடனே சுபஸ்ரீ தன்னைக் காப்பாற்றும்படி சத்தம் போட்டுள்ளார். சுபஸ்ரீயின் சத்தம் கேட்டு ஏற்கனவே அவரின் பாதுகாப்புக்காக வந்திருந்த பாலாஜியின் மாமா மணி மற்றும் அவரது மனைவி செல்வி ஆகியோர் விரைந்து வந்து தடுத்துள்ளனர். அப்போது இருதரப்பின இரு தரப்பினருக்கும் தகராறு நடைபெற்று உள்ளது. இச்சம்பவம் குறித்து சுபஸ்ரீ முசிறி டிஎஸ்பி யாஸ்மினிடம் புகார் அளித்தார். புகாரை விசாரித்த டிஎஸ்பி யாஸ்மின் ஜெம்புநாதபுரம் காவல் நிலையத்திற்கு அவர்களை அனுப்பி வைத்து சம்பவம் குறித்து ஜெம்புநாதபுரம் போலீசார் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
இதையடுத்து ஜெம்புநாதபுரம் போலீசார் பெற்றோர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கல்லூரிக்கு தேர்வு எழுத வந்த காதல் திருமணம் செய்த பெண்ணை பெற்றோர் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.