திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம்

 
அமித்ஷா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சுவாமி தரிசனம் செய்தார்.

நாடு முழுவதும் நடைபெற்று வந்த ஏழு கட்ட தேர்தலில் இறுதி கட்ட தேர்தல் வரும் 1 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதி கட்ட பரப்புரை நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பரப்புரை முடிந்ததால் கோயில்களுக்கு சென்று சிறப்பு பூஜை மேற்கொண்டு வருகிறார். அவ்வாறு  நேற்று சிறப்பு விமானத்தில் திருப்பதி ரேணுகுண்டா விமான நிலையம் வந்த அமித்ஷாவை, விமான நிலையத்தில் பாஜகவினர், அதிகாரிகள் வரவேற்றனர். 

பின்னர் திருமலை சென்ற அமித்ஷாவை இரவு அங்கு தங்கி இன்று காலை வி.ஐ.பி. தரிசனத்தில் ஏழுமலையான் கோயிலில் வழிபாடு செய்தார். முன்னதாக கோயில் நுழைவு வாயிலில் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் ரங்கநாதர் மண்டபத்தில் வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசீர்வாதம் செய்து வைத்து தீர்த்த பிரசாதங்கள்,  சேஷ வஸ்திரம் அணிவிக்கப்பட்டது. அமித்ஷா வருகையையொட்டி ரேணுகுண்டா விமான நிலையம் முதல் ஏழுமலையான் கோவில் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பக்தர்களுக்கும் ஊடகத்தினருக்கு அமித் ஷா செல்லும் இடங்களில் அனுமதிக்கப்படாமல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.