சாம்பியன் பட்டத்தை வென்றது தபாங் டெல்லி..!

 
1 1

புரோ கபடி லீக் தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. நேற்று டெல்லியில் உள்ள தியாகராஜ் உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தபாங் டெல்லி மற்றும் புனேரி பால்டன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியின் முதல் பாதியில் இருந்தே சிறப்பாக செயல்பட்ட தபாங் டெல்லி அணி வலுவான முன்னிலையைப் பெற்றிருந்தது.

அந்த அணி முதல் பாதியின் முடிவில் தபாங் டெல்லி அணி 13 ரைட் புள்ளிகள், 3 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட், 2 கூடுதல் புள்ளிகளுடன் 20 புள்ளிகளை வென்றது. மறுபக்கம் தடுமாற்றதுடன் தொடங்கிய புனேரி பால்டன் அணி 7 ரைட் புள்ளிகள், 7 டேக்கிள் புள்ளிகளுடன் 14 புள்ளிகளை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் தபாங் டெல்லி அணி 6 புள்ளிகள் முன்னிலையைப் பெற்றிருந்தது.

பின்னர் தொடங்கிய இரண்டாம் பாதி ஆட்டத்தில் முன்னிலையைத் தக்கவைக்கும் முயற்சியில் தபாங் டெல்லி சற்று தடுமாறியது. அதேசமயம் புனேரி பால்டன் அணி தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி, அடுத்தடுத்து புள்ளிகளை கைப்பற்ற இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.

இரண்டாம் பாதி முடிவில் தபாங் டெல்லி அணி 4 ரைட் புள்ளிகள், 5 டேக்கிள் புள்ளிகள், 2 கூடுதல் புள்ளிகள் என மொத்தமாக 11 புள்ளிகளை மட்டுமே எடுத்த நிலையில், புனேரி பால்டன் அணி 8 ரைட் புள்ளிகள், 3 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட், ஒரு கூடுதல் புள்ளி என மொத்தமாக 14 புள்ளிகளைக் கைப்பற்றியது. இரண்டாம் பாதியில் புனேரி பால்டன் அணி முன்னிலை பெற்ற நிலையிலும், அந்த அணியால் வெற்றியை ஈட்ட முடியவில்லை.

இதன் காரணமாக ஆட்டநேர முடிவில் தபாங் டெல்லி அணி 31-28 என்ற புள்ளிகள் கணக்கில் புனேரி பால்டன் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் தபாங் டெல்லி அணி இரண்டாவது முறையாக புரோ கபடி லீக் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்துள்ளது.