மக்களுக்கு நிம்மதியான செய்தி : தமிழ்நாட்டிற்கு 'சென்யார்' புயலால் பாதிப்பு இல்லை..!

 
1 1

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  மலாக்கா ஜல சந்தி, தெற்கு அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் சென்யார் புயல் உருவானது. சென்யார் புயல் நேற்று காலை 5.30 மணியளவில் உருவானது. அடுத்த 24 மணி நேரத்தில் புயலின் தீவிரத்தை தக்கவைத்து பின்னர் படிப்படியாக வலுவிழக்கும். சென்யார் புயலால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே சென்னை வானிலை மண்டல ஆய்வு மைய அதிகாரி செந்தாமரை கண்ணன் கூறியதாவது:- நேற்று முன்தினம் மலேசியா ஜலசந்திர் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த மண்டலம் நள்ளிரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. அதன் பின்னர் நேற்று காலையில் அது புயலாக வலுப்பெற்று உள்ளது. இந்த புயலுக்கு 'சென்யார்' என்று பெயரிடப்பட்டு உள்ளது.

இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று பிற்பகல் இந்தோனேசியா பகுதிகளை கடந்து அதே பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழக்கக்கூடும். மேலும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் கிழக்கு இலங்கை கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே பகுதியில் நிலை கொண்டு உள்ளது. இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக தீவிரமடையும் என்பதால் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்கள் பரவலாக மழை பெய்யக்கூடும். ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.