“மோடி எங்களுடன் இருக்கிறார்! ஜீ உள்ளவரை ஜீபூம்பா நடக்கும்”- சி.வி.சண்முகம்
கல்விக்கடனை ரத்து முடியாது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் அரசு பொறுப்பேற்று அரசு பணம் கட்டும் என அதிமுக பொதுக்கூட்டத்தில் சி.வி.சண்முகம் பேசினார்.

விழுப்புரம் அடுத்த சூரப்பட்டு பகுதியில் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நடைப்பெற்றது. விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின் சி.வி. சண்முகம் பேசியதாவது, “5 ஆண்டு கால ஆட்சியில் மக்கள் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் விஷம் போல் ஏறியுள்ள விலைவாசியை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் மக்கள் சந்தோஷமாக இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்கிறார். ஐந்தாண்டு காலத்தில் வரி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தாய்மார்களுக்கும் அதிமுக ஆட்சி அமைத்தபின் ஒருமுறை பத்தாயிரம் வழங்கப்படும். திமுக ஆட்சியில் ஆயிரம் ரூபாயும், ஓசி பஸ்சைத்தவிர வேறு எதுவும் இல்லை. தினம் தினம் விளம்பர திட்டங்களுக்கு வித, விதமாக பெயர் சூட்டுவதைத் தவிர திமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் கொண்டு வரப்படவில்லை.
வாயைத் திறந்தாலே சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு. பொய் தான் பேசுகிறார். அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை, மருந்து, ஊசி இல்லை. கல்விக்கடனை ரத்து செய்ய முடியாது. வாக்குறுதி கொடுத்தால் அது பொய்யான வாக்குறுதி. அதிமுக ஆட்சிக்கு வந்தால் அரசு பொறுப்பேற்று அரசு பணம் கட்டும். ஏனென்றால் எங்க கூட்டணியில் ஜீ உள்ளார். பிரதமர் மோடிஜீ. ஜீ உள்ளவரை ஜீபூம்பா நடக்கும். கடனின் அசலில் மோடியிடம் சொல்லி குறைக்க வைப்போம். ஏன் என்றால் எங்களுடன் மோடி இருக்கிறார்” என்றார்.

