“நம்மளை அழிக்க சில புரோக்கர்கள் முயற்சிக்கிறாங்க, அவங்க நம்ம கூடவே இருக்காங்க”- சி.வி.சண்முகம் ஆவேசம்
நம் எதிரி யார் என்று தெரியும்.. ஆனால், நம்மோடு உறவாடிக் கெடுக்கிறவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், “அதிமுகவில் இருந்து சண்முகம் வெளியேறுகிறார்.. தங்கமணி வெளியேறுகிறார் என்று ஊடகங்களில் பேசினார்கள். எங்கே சென்றோம்? என் உயிர்மூச்சு உள்ளவரை அதிமுகவில் தான் இருப்பேன். உறவாடி கெடுப்பவர்கள் அதிமுகவில் இருக்கிறார்கள். எதிரிகள் யார் என்று தெரியும், துரோகிகள் யார் என்றும் நமக்கு தெரியும். சில அரசியல் புரோக்கர்கள் நம்முடன் உறவாடி கெடுத்து கொண்டிருக்கின்றனர், அவர்களை கண்டறிந்து கவனமாக இருக்க வேண்டும். எதிரி துமுக மட்டுமல்ல, துரோகிகள் மட்டுமல்ல, உறவாடிக்கொண்டிருப்பவர்களும் இதில் இருக்கிறார்கள். அதிமுகவை அழிக்க வேண்டும் என கங்கணம் கட்டி கொண்டுள்ளனர். அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்ற நிலையை எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்துள்ளார்.
இன்னும் தேர்தலுக்கு 100 நாட்கள்தான் இருக்கிறது. திமுக ஆட்சிக்கு முடிவுரை கவுண்டவுன் ஸ்டார்ட். துரோகிகளை கண்டுகொள்ள வேண்டும். அதிகாரம், ஆட்சி, பண பலத்தை மீறி அதிமுகவை நிலை நிறுத்தியுள்ளோம். உண்மையான தொண்டர்கள் உயிர் மூச்சு உள்ள வரை அதிமுகவில் தான் இருப்பார்கள். எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமைப்போம்” என்றார்.


