முதலமைச்சர் ஸ்டாலின் நமக்கு கூட்டணி அமைத்து கொடுத்துவிடுவார் - சி.வி.சண்முகம்
முதலமைச்சர் ஸ்டாலின் நமக்கு கூட்டணி அமைத்து கொடுத்துவிடுவார் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், “எங்களுக்குள் எங்கே இருக்கிறது கருத்து வேறுபாடு? எங்கே இருக்கிறது சலசலப்பு? சலசலப்பு வராதா? கருத்து வேறுபாடு வராதா? என்று எண்ணிக்கொண்டு இருப்பவர்கள், இங்கே நிரம்பி இருக்கும் எங்கள் தொண்டர்களை பாருங்கள். அதிமுகவில் சலசலப்பு, கருத்து வேறுபாடு உள்ளதாக சிலர் உண்மைக்கு புறம்பாக கூறிவருகின்றனர்.
நூறு கருணாநிதி வந்தாலும், அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. அதிமுக யாரை நம்பியும் இல்லை. தொண்டர்களின் ஒற்றுமையே கட்சியின் பலம். ஊடகத்தையும் பத்திரிக்கையும் நம்பி அஇஅதிமுக இல்லை. கூட்டணி குறித்த கவலை வேண்டாம். கூட்டணி நிச்சயம் அமையும். நாம் அமைக்கின்றோமோ இல்லையோ, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நமக்கு கூட்டணி அமைத்துக்கொடுத்து விடுவார்” என்றார்.