பழனிசாமியின் தலைமையை ஏற்க மறுக்கும் சி.வி.சண்முகம்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்குப் பின்னர் அதிமுகவின் உட்கட்சி பூசல் காரணமாக எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி - சி.வி.சண்முகம் என இருதரப்பாக செயல்பட்டு வந்த சூழலில் அதற்கு முடிவுரை எழுதும் விதமாக சி.வி.சண்முகத்தை தவிர எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிருப்தி எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று ஆதரவு தெரிவித்தனர். அதன்படி, தேர்தல் முடிவில் அதிமுகவில் மொத்தம் உள்ள 47 சட்டமன்ற உறுப்பினர்களில் 22 பேர் எடப்பாடி பழனிசாமிக்கும், 25 பேர் எஸ்.பி.வேலுமணி - சி.வி.சண்முகம் தரப்பிற்கும் ஆதரவு தெரிவித்து இருந்தனர். அதில், சி.வி.சண்முகம் தரப்பை சேர்ந்த 4 பேர் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த நிலையில் சி.வி.சண்முகத்தை தவிர மீதம் உள்ள 20 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை, எம்.ஆர்.சி.நகரில் உள்ள சி.வி.சண்முகம் அலுவலகத்தில் சி.வி.சண்முகத்தை சமாதானம் செய்யும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்த மூத்த நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி, காமராஜ், தங்கமணி, கே.பி.அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். இதனையடுத்து, சமாதான முயற்சியில் உடன்பாடு எட்டப்படாததன் காரணமாக சி.வி.சண்முகத்தை சமாதானம் செய்ய வந்த அதிமுக மூத்த நிர்வாகிகள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டனர். குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்படுவது அதிமுகவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என சி.வி.சண்முகம் அதிமுக மூத்த நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, எம்.ஆர்.சி.நகர் இல்லத்திலேயே, தனது ஆதரவாளர்கள் உடன் சி.வி.சண்முகம் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளிடம் பேசிய அவர், என்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதில் உறுதியாக இருக்கிறேன் நாளை அதனை ராஜினாமா செய்ய உள்ளேன். இந்த கட்சிக்காக எப்போதுமே உண்மை உள்ளவனாக உணர்வு உள்ளவனாக செயல்பட்டிருக்கிறேன் ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிடிவாதம் இந்த கட்சிக்கு நல்லது அல்ல. அதனால் இந்த முடிவை எடுக்கிறேன். என்னோடு பயணிப்பவர்கள் பயணிக்கலாம் அல்லது என்னுடைய முடிவை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அவரவர் விருப்பப்படி செயல்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனையடுத்து, விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்ய இருப்பதாக சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் கூறி வந்த நிலையில் தற்காலிகமாக இன்று ஒரு நாள் அதை ஒத்திவைத்துள்ளதாகவும் மீண்டும் நாளை பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

