காவு வாங்கிய கள்ளச்சாராயம்- திமுக கவுன்சிலரின் கணவர்தான் காரணம்- சிவி சண்முகம்

கள்ளச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டவர்களை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சந்தித்த பின் அதிமுக எம்பி சிவி சண்முகம் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர், “விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா சாக்லேட் உள்ளிட்ட போதைப்பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கிறது. போதைப்பொருட்களால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர் கையூட்டு பெற்றுக்கொண்டு தூங்கி கொண்டிருக்கின்றனர். தனது ஆட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் ஸ்டாலின் உள்ளார். ஸ்டாலினின் குடும்பம் காவல்துறையையும், தமிழகத்தையும் பங்கு போட்டுள்ளது. தமிழக காவல்துறையை ஸ்டாலின் குடும்பம் முடக்கியுள்ளது. தமிழ்நாட்டை போதை மாநிலமாக மாற்றியதுதான் திமுக அரசின் சாதனை. பாக்கெட் சாராயம் உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை குறித்து காவல்துறைக்கு நன்றாக தெரியும்.
அரசே சாராயத்தை விற்கிற்து, மதுவை ஊக்குவிக்கிறது. 8 சாராய ஆலை திமுகவினருக்கு உள்ளது. தவறுக்கு துணைப்போகும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தூங்கிவரும் காவல்துறை போதையை ஊக்குவிக்கிறது. திமுக கவுன்சிலரின் கணவர், 20 நாட்களுக்கு முன்பு 5000 லிட்டர் கள்ளச்சாராயத்துடன் கைது செய்யப்பட்டார். இன்று காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்படுகிறார். அவரிடமிருந்து கள்ளச்சாரயம் வாங்கி அருந்தியவர்களே பலியாகி உள்ளனர். இதற்கு திமுக அரசு என்ன பதில் சொல்ல போகிறது? கள்ளச்சாரயம் யாரு விக்கறாங்கன்னு தெரியாதா? அப்பறம் எதுக்கு முதலமைச்சர்? உளவுத்துறை?” என்றார்.