ஆடு மேய்ப்பவர் வீட்டுக்கு கரண்ட் பில் ரூ.10,000... சர்ச்சை வெடித்த நிலையில் ரூ.4054 ஆக மாற்றம்
விருதுநகர் மாவட்டம் ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் ஆடு மேய்க்கும் தொழிலாளியின் வீட்டுக்கு ரூ.10,451 மின் கட்டணமாக வந்ததாக செய்திகள் வெளியான நிலையில் மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

விருதுநகர் மின் பகிர்மான வட்டம், திருவில்லிபுத்துார் கோட்டம், ஊரகம் உபகோட்டம், மல்லிப்புதுார் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட இராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் ஆடு மேய்த்திடும் தொழிலாளி வீட்டிற்கு செப்டம்பர் மாத மின்கட்டணமாக ரூ. 10,451 கணக்கிடப்பட்டிருந்ததாகவும், அது குறித்து புகார் செய்தும், மின் கட்டணத்தை செலுத்தக் கோரியதால், மின் கட்டணம் செலுத்த இயலாததால் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மின்வாரியம், “திருவில்லிபுத்தூர், இராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் திரு.இராஜேந்திரன் த/பெ பிச்சை தேவர் என்பவரது வீட்டு மின் இணைப்பு எண்: 07268001199 ல் கடந்த 07/2026 ம் மாதம் ரூ.700/- மின் கட்டணம் வந்ததை தொடர்ந்து மின் வாரிய அலுவலர்களால் 31/07/2026 மற்றும் 02/08/2026 ஆகிய தினங்களில் மின் அளவி ஆய்வு செய்யப்பட்டு Check Reading ம் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஆய்வில் மின் அளவி நல்ல நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மீண்டும் 09/2026 ம் மாத மின் கட்டணம் ரூ.10,451/- ஆக பதிவு செய்யப்பட்டிருந்ததை தொடர்ந்து 02/09/2026 அன்று மீண்டும் கள ஆய்வு செய்யப்பட்டது. கள ஆய்வில், திரு.இராமகிருஷ்ணன் அவர்கள் வீட்டில் Air Cooler உபயோகத்தில் இருந்ததாலும், கடந்த 09/2024 மற்றும் 11/2024 ஆகிய காலகட்டங்களிலும் இதே அளவு பயன்பாடு இருந்துள்ளது குறித்தும் திரு. இராமகிருஷ்ணன் அவர்களிடம் எடுத்துரைத்த போது அதனை ஏற்றுக்கொண்டு தான் 10 தினங்களில் மின் கட்டணம் செலுத்தி விடுவதாக தெரிவித்துள்ளார். ஆனால், மின்கட்டணத்தை உரிய காலத்திற்குள் செலுத்தாததால் 24/9/2026 அன்று மின் துண்டிப்பு செய்யப்பட்டது என்ற விபரம் பணிந்து சமர்பிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் மின் அளவியின் தரவுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில், கணக்கீட்டாளர் கடந்த 12 மாதங்களாக மின் அளவை குறைத்து தவறாக பதிவு செய்ததன் காரணமாகவும், சிறப்பு ஆய்வில் சரியான மின் அளவு பதிவு செய்யப்பட்டதன் காரணமாகவும், 09/2026 ம் மாதத்தில் ரூ.10,451/- மின் கட்டணம் கணக்கீடாகியுள்ளது என்ற விபரம் பணிந்து சமர்பிக்கப்படுகிறது. எனவே, மின் அளவி ஆய்வாக அறிக்கையின் (CMRI தரவிறக்கம்) அடிப்படையில், மின் கட்டணம் திருத்தப்பட்டு தற்போது நிலுவைத்தொகையாக ரூ.4054/- கணக்கிடப்பட்டுள்ளது. தவறு செய்த மின் கணக்கீட்டாளர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்ற விபரமும் பணிந்து சமர்பிக்கப்படுகிறது. மேலும், திரு.இராமகிருஷ்ணன் அவர்கள் திருத்தப்பட்ட மின் கட்டணத்தை செலுத்தியதை தொடர்ந்து, இன்று மறு மின் இணைப்பு வழங்கப்பட்டது என்ற விபரமும் பணிந்து சமர்பிக்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

