CUET UG தேர்வர்கள் கவனத்திற்கு..! மறுதேர்வு தேதிகள் விரைவில் அறிவிப்பு..!

 
1

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைகள் மற்றும் அவற்றின் கீழ் செயல்படும் கல்லுாரிகளில், இளநிலை பட்ட படிப்புகளில் சேர, 'க்யூட்' எனும், பொதுவான பல்கலை நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

இதன்படி, 2026ம் ஆண்டுக்கான 'க்யூட்' இளநிலை நுழைவுத் தேர்வு, கடந்த 11ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.

நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நேற்று கணினி வழியில், 'க்யூட்' தேர்வு நடந்தது.மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், மாலை 3:00 மணிக்கு தொடங்குவதாக இருந்த தேர்வு, மாலை 4:00 மணிக்கு மாற்றப்பட்டது.

இந்த சூழலில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்வு எழுதாமல் சென்ற மாணவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்படும் என, தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

இது குறித்து, தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்ட அறிக்கை: 'க்யூட்' நுழைவுத் தேர்வின்போது, சில தேர்வு மையங்களில் எதிர்பாராத வகையில், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. தேசிய தேர்வுகள் முகமையின் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டி.சி.எஸ்., நிறுவனத்திடம், இந்த கோளாறுக்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.இத்தேர்வில், 3,765 பேர், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தேர்வு மையங்களை விட்டு வெளியேறினர். தொழில்நுட்ப கோளாறால் தேர்வு எழுத முடியாத, 3,765 தேர்வர்களுக்கு, மறு தேர்வு நடத்த, தேசிய தேர்வுகள் முகமை திட்டமிட்டுள்ளது. அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.