உதவியாளர் இல்லாமல் பள்ளி வேனை இயக்கியது ஏன்?- பள்ளிக்கல்வி துறை சார்பில் பள்ளிக்கு நோட்டீஸ்
கடலூர் அருகே தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வி துறை சார்பில் பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில், ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியத்தால் இன்று காலை ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறை சென்று கொண்டிருந்த ரயில் மோதி மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆபத்தான நிலையில் 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற வந்த அண்ணாதுரை என்பவரும் மின்கம்பம் சாய்ந்து மின்சாரம் தாக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடலூர் கிருஷ்ணசாமி பள்ளி வேனில் உதவியாளர் இல்லாமல் சென்றதால் பள்ளிக்கல்வி துறை சார்பில் பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உதவியாளர் இல்லாமல் பள்ளி வாகனம் இயக்கப்பட்டது எப்படி என்பது குறித்தும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.


