கடலூர் தென்பெண்ணை ஆற்றில் ஆயுதக் குவியலா?

 
தோட்டா

கடலூர் மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகம் எதிரே தென்பெண்ணையாற்றின் குறுக்கே கும்தாமேடு தரைப்பாலம் அமைந்துள்ளது. தற்போது ஆற்றில் குறைந்த அளவே தண்ணீர் செல்வதால், இந்த பாலத்தின் அருகில் இன்று மாலை புதுச்சேரி மாநிலம் கும்தாமேடு பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள், மீன்பிடிக்க ஆற்றில் இறங்கியுள்ளனர். அப்போது சேற்றில் கால் வைக்கும் போது, அவர்களது கால்களில் ஏதோ பொருள் சிக்கியுள்ளது. உடனே அவர்கள் அதனை எடுத்து பார்த்த போது 10-க்கும் மேற்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள் கிடைத்துள்ளன.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவர்கள், அந்த தோட்டாக்களை எடுத்து, அருகில் ஆல்பேட்டை சோதனை சாவடியில் இருந்த போலீசாரிடம் கொடுத்தனர். அதனை வாங்கிய போலீசார், உடனே புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதையடுத்து சிறுவர்களிடம் சிக்கிய தோட்டாக்களை பார்வையிட்ட போலீசார், தொடர்ந்து அந்த தோட்டாக்கள் எடுக்கப்பட்ட இடத்தை சுற்றிலும் தண்ணீரில் தோண்டி பார்த்தனர். அப்போது தென்பெண்ணையாற்றில் தோண்ட தோண்ட பல்வேறு தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் சிறிய தோட்டாக்கள் முதல் பெரிய அளவுள்ள தோட்டாக்கள் வரை மொத்தம் 6 வகையிலான 169 தோட்டாக்கள் சிக்கின. அவற்றை கைப்பற்றிய போலீசார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அதன்பிறகு அந்த தோட்டாக்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பார்வையிட்டார். 

தென்பெண்ணையாற்றில் 6 வகையை சேர்ந்த 169 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன நிலையில், அவை அனைத்தும் வெடிக்காத தோட்டாக்கள். பெரும்பாலான தோட்டாக்கள் துருப்பிடித்துள்ளதால், அவை எந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் என்பது குறித்து தடயவியல் சோதனைக்கு பிறகே தெரியவரும். கடந்த மாதம் இதே பகுதியில் சிறுவர்கள் வலையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களது வலையில் ஒரு கை துப்பாக்கி சிக்கியது. ஏற்கனவே கடந்த மாதம் துப்பாக்கி கைப்பற்றப்பட்ட இடத்திலேயே தற்போது தோட்டாக்களும் சிக்கியுள்ளன. அதனால் அந்த இடத்தில் வேறு ஏதேனும் ஆயுதங்கள் உள்ளனவா என்பது குறித்து, விரைவில் தோண்டி பார்த்து சோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக கடலூர் போலீசார், துப்பாக்கி தோட்டாக்களை ஆற்றில் வீசியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தற்போது தோட்டாக்கள் எடுக்கப்பட்ட இடத்தில் தான் கடந்த மாதம் 6-ந் தேதி கைத்துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டது. அதனை எடுத்துக் கொடுத்த சிறுவர்கள் கையில் தான், தற்போது தோட்டாக்களும் சிக்கியுள்ளன. இந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.