”விபத்து நடந்தபிறகு கூட கேட் கீப்பர் எழுந்து வரவில்லை”- படுகாயமடைந்த மாணவன்
வழக்கமாக செல்லும் பாதையில் சென்றபோது இன்று ரயில்வே கேட் திறந்துதான் இருந்தது. சிக்னல்கள் எதுவும் போடப்பட்டிருக்கவில்லை. ரயில் வரும் சத்தம் கூட கேட்கவில்லை என விபத்தில் காயமடைந்த மாணவர் விஸ்வேஷ் கூறியுள்ளார்.

கடலூாில் இயங்கி வரும் ஒரு தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கு சொந்தமான வேன் ஒன்று கடலூர் அருகே உள்ள தொண்டமாநத்தம் பகுதிக்கு மாணவர்களை ஏற்ற சென்றது. வேனை கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த சின்னபையன் மகன் சங்கர்(வயது 47) என்பவர் ஓட்டினார். வேனில் சின்னகாட்டு சாகை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த திராவிடமணி மகள் 11-ம் வகுப்பு படித்து வரும் சாருமதி, 10-ம் வகுப்பு படித்து வரும் அவரது தம்பி செழியன், தொண்டமாநத்தம் விஜயசந்திரகுமார் மகன் 10-ம் வகுப்பு படித்தும் வரும் விஸ்வேஷ் (15), 6-ம் வகுப்பு படித்து வரும் அவனது தம்பி நிமலேஷ் (12) ஆகிய 4 பேர் ஏறினர். செம்மங்குப்பம் ரெயில்வே கேட் அருகே காலை 7.45 மணிக்கு பள்ளி வேன் வந்தது. அப்போது ரெயில்வே கேட் திறந்து இருந்ததால், சங்கர் வேனை முன்னோக்கி இயக்கி, ரெயில்வே கேட்டை கடந்து செல்ல முயன்றார். அந்த சமயத்தில், விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற பயணிகள் ரெயில் வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் ரெயில் பள்ளி வேன் மீது மோதியதில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்.

வேன் விபத்து சம்பவத்தில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் மாணவர் விஸ்வேஷ் கூறுகையில், "வழக்கமாக செல்லும் பாதையில் சென்றபோது கேட் திறந்துதான் இருந்தது. சிக்னல் எதுவும் போடப்படவில்லை.. ரயில் வரும் சத்தம் கூட கேட்கவில்லை. பள்ளி வேன் கடந்து சென்றபோது ரயில் மோதியது. நான் விழுந்து எழுந்திருச்ச போது கூட அந்த கேட் கீப்பர் வர வில்லை. ரயில்வே கேட்டை வேன் டிரைவர் திறக்க சொல்லவில்லை, கேட் கீப்பர் சொல்வது முற்றிலும் பொய்" என்று கூறினார்.


