கடலூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: தம்பதி கைது..

கடலூர் பட்டாசு ஆலை வெடி விபத்து வழக்கில் ஆலையின் உரிமையாளர்களான தம்பதி சேகர்(55) மற்றும் மனைவி கோசலா(50) ஆகிய இருவரையும் ரெட்டிச்சாவடி போலீசார் கைது செய்தனர். இருவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் மற்றும் வட்டம் மதலப்பட்டு மதுரா, சிவனார்புரம் கிராமத்தில் இயங்கிவந்த தனியார் வெடிபொருள் தயாரிக்கும் ஆலையில் நேற்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்தைச் சேர்ந்த மல்லிகா, (60) என்பவர் உயிரிழந்தார். மேலும் இவ்விபத்தில் கடுமையான மற்றும் லேசான தீக்காயங்களுடன் சுமதி (45), பிருந்தா தேவி. (35), லட்சுமி. (24), செவ்வந்தி, (19), மற்றும் அம்பிகா (18), ஆகியோர் கடலூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த மல்லிகாவின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 நிவாரணமும் வழங்கப்படுமென அறிவித்திருந்தார். இந்த நிலையில், கடலூர் பட்டாசு ஆலை வெடி விபத்து வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த ரெட்டிச்சாவடி போலீசார், ஆலையின் உரிமையாளர்களான தம்பதி சேகர்(55) மற்றும் மனைவி கோசலா(50) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்கள் இருவர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.