“மக்கள் அமைதியான முறையில் மிகப்பெரிய புரட்சி செய்து வருகிறார்கள்”- நிர்மல்குமார்
தமிழக அரசு வேண்டுமென்றே வாக்காளர்களை தடுத்து நிறுத்துவதற்காக பேருந்துகளை இயக்காமல் பயணிகள் காத்திருக்கின்றனர். தேர்தல் ஆணையம் இதை கருத்தில் கொண்டு கூடுதலாக இரண்டு மணி நேரம் அனுமதி அளிக்க வேண்டும் என தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் மதுரை திருநகரில் உள்ள தனியார் பள்ளியில் தமிழக வெற்றிக் கழக இணை பொது செயலாளரும் திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளருமான சிடிஆர் நிர்மல் குமார் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “இது ஒரு வித்தியாசமான தேர்தல் என்று சொல்லி இருந்தோம். அதேபோலவே லட்சக்கணக்கானோர் வெளிநாட்டில் இருந்து வாக்களிக்க வந்துள்ளனர். பேருந்துகள் இயக்கப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதிகாரிகள் திமுகவுடன் சேர்ந்து கொண்டு செயல்படுகின்றனர். எனவே பலர் வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்ப தாமதம் ஆகிறது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிக்க வருகிறார்கள் என்று தெரிந்து பேருந்துகளை இயக்காமல் நிறுத்துகிறார்கள். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர். தேர்தல் ஆணையம் இதை கருத்தில் கொண்டு கூடுதலாக இரண்டு மணி நேரம் அனுமதி அளிக்க வேண்டும். மக்கள் உற்சாகமாக திருவிழாவைப் போல் வாக்களிப்பதை பார்க்க முடிகிறது. காலை 7 மணி முதல் மிகப்பெரிய வரிசையை பார்க்க முடிந்தது. மக்கள் அமைதியான முறையில் மிகப்பெரிய புரட்சி செய்து வருகிறார்கள்” எனக் கூறினார்.

