பதவி தரும்போது அதிருப்தி வருவது இயல்புதான்- நிர்மல்குமார்

 
நிர்மல்குமார் நிர்மல்குமார்

பதவி கொடுக்கும்போது அதிருப்டி வருவது இயல்புதான், விஜய் அனைவரையும் அரவணைப்பார் என தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மத்திய மாவட்டத்துக்கு சாமுவேல் என்பவர் தவெக மா.செவாக நியமிக்கப்படவிருக்கிறார் என்ற தகவல் வெளியானது. சாமுவேலின் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியை சேர்ந்த பெண் நிர்வாகி தன்னுடைய ஆதரவாளர்களுடன் பனையூர் வந்து சேர்ந்தார். அவரை தவெகவின் அலுவலகத்துக்கு அரை கிலோ மீட்டருக்கு முன்பாகவே பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினர். அவர்களை கலைந்து போகுமாறும் அறிவுறுத்தினர். '2 வருசமா உண்மையா உழைச்சவங்களுக்கு எந்த மதிப்பும் இல்ல. தொகுதிக்குள்ள எந்த வேலையும் செய்யாத செல்வாக்கே இல்லாத ஒரு ஆளுக்கு போஸ்டிங் போட்டா என்ன நியாயம்?' என அஜிதாவின் ஆதரவாளர்கள் முறையிட்டனர். இதைத் தொடர்ந்து சமீபத்தில் விஜய்யின் கூட்டங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை திட்டமிட பணியமர்த்தப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஷபியுல்லா அஜிதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அரைமணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையிலும் அஜிதா சமாதானம் ஆகவில்லை. விஜய் வரும் போது இங்கிருந்து பிரச்னை செய்துவிடாதீர்கள் எனக்கூறி அஜிதாவை பக்கத்து தெருவுக்கு அனுப்பி வைத்தனர். அங்கே தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்த அஜிதாவிடம், 'இந்த முறையும் நாம தளபதியை பார்த்து பிரச்னையை சொல்லாம விட்டுட்டா, அவ்வளவுதான் எல்லாமே முடிஞ்சிடும்' என அவரது ஆதரவாளர்கள் கூறியிருக்கின்றனர். உடனடியாக மீண்டும் பனையூர் அலுவலகத்தை நோக்கி ஆதரவாளர்களுடன் வந்த அஜிதா, விஜய் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுதொடர்பாக தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் கூறுகையில், “பதவி கொடுக்கும்போது அதிருப்தி. வருவது இயல்புதான், விஜய் அனைவரையும் அரவணைப்பார். திமுகவை போல தவெகவில் குறுநில மன்னர்கள் இல்லை. திமுகவைவிட தவெகவில் ஜனநாயகம் உள்ளது.  திமுகவுக்கு மாவட்ட செயலாளர் வேலை பார்ப்பதை தவிர, பட்டியல் சமுதாயத்திற்கு  திருமாவளவன் என்ன செய்தார். மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காத அதிருப்தியால் தூத்துக்குடி அஜிதா விஜய் காரை மறித்தார். பின்னர் அவரை சமாதானம் செய்து அனுப்பிவைத்தோம்” என்றார்.