மாட்டின் வாயில் உயிர் கோழியை திணித்து சாப்பிட வைத்த கொடூரம்- தீவிர விசாரணை

 
ஜல்லிக்கட்டு மாட்டின் வாயில் உயிர் கோழியை திணித்து சாப்பிட வைத்த கொடூரம்- தீவிர விசாரணை

ஜல்லிக்கட்டு மாட்டின் வாயில் கோழியை உயிருடன் திணித்து உண்ண வைத்த விவகாரத்தில் விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

காளை மாட்டை பிடித்த நிலையில் அதன் வாயில், ஒரு கோழியை உயிருடன் திணிக்கும் காட்சி

சேலம் மாவட்டம்,  தாரமங்கலம் அருகே உள்ள பாப்பம்பாடி கிராமம் சின்னப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் யூ-டியூபர் ரகு.  இவர் தனது நண்பர்களுடன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22-ஆம் தேதி அன்று ஒரு ஜல்லிக்கட்டு காளை மாடு ஒன்றை  பிடித்து அதன் வாயில்,  உயிருடன் இருக்கும் கோழி ஒன்றை  திணித்து , சாப்பிட வைக்கும்  காட்சியை வீடியோ எடுத்து தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். 

இந்த வீடியோ கடந்த சில நாட்களாக  சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் சென்னை  தி.நகர் பகுதியில் வசிக்கும் விலங்குகள் நல உரிமைகள் நிறுவனர் 
விஜயா பிரசன்னா என்பவர் தாரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றினை  கொடுத்தார். அதில் காளை மாடு ஒன்றின் வாயில் உயிருடன் உள்ள கோழியை திணித்து சித்திரவதை செய்தவர்கள் மீது விலங்குகள் வகை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்திருந்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட வீடியோவை பார்த்த தாரமங்கலம் போலீசார், நடத்திய விசாரணையில் சேலம் சின்னப்பம்பட்டி அருகே அக்கறைப்பட்டி அங்காள பரமேஸ்வரி கோவில் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி என்பவருடைய காளை மாட்டின் வாயில் உயிருடன் உள்ள கோழியை சாப்பிட திணித்ததாக கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து இதற்கு காரணமான ரகு மற்றும் அவருடைய நண்பர்கள் இரண்டு பேர் மீதும்  வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.