கடலூர் அருகே கொத்துக்கொத்தாக உயிரிழக்கும் காகங்கள்!
கடலூர் அருகே காகங்கள் குவியல் குவியலாக அடுத்தடுத்து இறந்த நிலையில், பறவை காய்ச்சலா? என பொதுமக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.

சென்னையில் கடந்த மாதம் அடையாறு இந்திரா நகர் பூங்கா மற்றும் நீலாங்கரை பகுதிகளில் காகங்கள் கொத்து கொத்தாக இறந்து கிடந்தன. தற்போது வரை, ஆங்காங்கே காகங்கள் இறக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த காகங்கள் எச்5என்1 வைரஸ் தொற்று ஏற்பட்டு பறவை காய்ச்சலால் இறந்திருக்குமோ என்று பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இறந்த காகங்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆய்வு முடிவில் எச்5 என்1 வைரஸ் தொற்று, அதாவது பறவை காய்ச்சல் ஏற்பட்டே இந்த காகங்கள் அனைத்தும் இறந்திருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக கால்நடை துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதேபோல் புதுச்சேரி மாநிலம் பாகூர் பகுதிகளிலும் இதுபோல் காக்கைகள் இறந்து கிடந்த நிலையில் தற்போது கடலூர் அருகே உள்ள பெரியகங்கனகுப்பம் ஊராட்சி பகுதியில் குவியல், குவியிலாக காக்கைகள் மயங்கி விழுந்து இறந்து கிடப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த கிராம மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இறந்து கிடக்கும் காக்கைகளை கோழிகள் கொத்தி தின்னுகின்றன. பறவைக்காய்ச்சல் இருக்குமோ என அச்சம் எழுந்துள்ளதால், கால்நடை துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே பறவை காய்ச்சலால் காகங்கள் உயிரிழந்த செய்திகள் வந்த நிலையில் பெரியகங்கனகுப்பம் பகுதியில் காகங்கள் இறந்து கிடந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

