சென்னை தி.நகரில் தீபாவளிக்கு புதுத்துணிகள் எடுக்க அலைமோதும் மக்கள் கூட்டம்!
தீபாவளியை முன்னிட்டு சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் மக்களின் கூட்டமாக நிரம்பி வழிகிறது.
வருகிற நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் துணிகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்துள்ளனர். கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டம் என்பதால் தீபாவளி பண்டிகை கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டது. கடந்த ஆண்டும் கொரோனாவில் இருந்து மீண்ட பிறகு மிகப்பெரிய அளவில் கலை கட்டவில்லை.
இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு தீபாவளியை மக்கள் உறவினர்களுடன் இணைந்து கொண்டாடுவதற்காக துணிமணிகள் பொருட்கள் வாங்க சென்னை தியாகராய நகருக்கு வருகை தருகின்றனர். தீபாவளிக்கு முந்தைய விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை என்பதால் தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் அதிகளவு மக்கள் அலைகடல் என திரண்டு வந்துள்ளனர். காவல்துறை தரப்பிலும் வழக்கத்திற்கு மாறாக 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏழு உயர் கோபுரங்களை அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் சாதாரண உடைகள் மக்களோடு மக்களாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஏழு இடங்களில் பார்க்கிங் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் தியாகராய நகர் பகுதிகளில் போக்குவரத்து போலீசார் சீர்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து ஒலிபெருக்கி மூலமாக எச்சரிக்கை செய்யும் விதத்தில் போலீசார் பல்வேறு எச்சரிக்கை தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.
எதிர்பார்த்ததை விட அதிகமான மக்கள் வந்த காரணத்தினால் சென்னை காவல்துறைக்கு பொதுமக்களை கட்டுப்படுத்துவது சவாலான நிலைமையில் இருக்கிறது. மேலும் ஆன்லைனில் வாங்குவதைவிட நேரில் வந்து வாங்கும்போது விலை அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இருப்பினும் அதிக அளவு கலெக்ஷன்கள் இருப்பதால் வெளி மாவட்டங்களில் இருந்து உறவினர்கள், நண்பர்களோடு வந்து நேரடியாக கடையில் துணிமணிகளை வாங்கிச் செல்வது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.