சம்பா நெல் பருவத்திற்கான பயிர்க்காப்பீடு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்!!

சம்பா நெல் பருவத்திற்கான பயிர்க்காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், "விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நாளையுடன் நிறைவடையும் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
காவிரியிலிருந்து உரிய நீரை பெற முடியாத காரணத்தினாலும், எதிர்பார்த்த மழைப்பொழிவு இல்லாத காரணத்தினாலும் காவிரி டெல்டாவில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தங்களின் சம்பா நெற்பயிர் சாகுபடி பணிகளை தாமதமாகவே தொடங்கியுள்ளனர்.
தீபாவளி பண்டிகை காலம், இணைய சேவை மையங்களில் தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட காரணங்களால் 60 முதல் 70 சதவிகிதம் வரையிலான விவசாயிகள் மட்டுமே தற்போது வரை பயிர் காப்பீடு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே, தமிழ்நாட்டின் உணவுத்தேவையை பெருமளவு பூர்த்தி செய்யும் காவிரி பாசன பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சம்பா நெல் பருவத்திற்கான பயிர்க்காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். " என்று குறிப்பிட்டுள்ளார்.