சேலம் அருகே பட்டாசு குடோனில் வெடி விபத்து ஒருவர் பலி

 
பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு 19ஆக உயர்வு

ஆத்தூர் அடுத்த கெங்கவல்லி அருகே கடம்பூரில் பட்டாசு தயாரிக்கும் குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Image

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள கடம்பூரில் அங்குள்ள மலை அடிவாரத்தில் தனசேகரன் என்பவர் அரசு அனுமதி பெற்று பட்டாசு தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். தனசேகரின் பட்டாசு தயாரிக்கும் குடோனில் தீபாவளி பட்டாசுகள் மட்டுமின்றி கிணற்றுக்கு வைக்கும் சிறிய வெடிகளையும் தயாரித்து வருகிறார். இந்த பட்டாசு தயாரிக்கும் தொழிலில் கடம்பூர் மற்றும் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் ஈடுபட்டு வருகிறார்கள். 

இந்நிலையில் இன்று பட்டாசு குடோனில் பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஆறு பேர் ஈடுபட்டு வந்தனர் . அப்போது அங்கு மற்றொரு குடோனில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறியது. இதில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த கூலமேடு கிராமத்தைச் சேர்ந்த ஆண்டியப்பன் மகன் ராஜமாணிக்கம் (44) என்பவர் உடல் சிதறி பலியானார் .மேலும் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த சத்தியா (30), விஜயா (32) ஆகிய 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர். பட்டாசு தயாரிக்கும் குடோனில் ஏற்பட்ட வெடி சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் கெங்கவல்லி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ  அணைத்தனர்.

இந்த விபத்தில் பலியான ராஜமாணிக்கத்தின் சடலத்தை கெங்கவல்லி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் விபத்தில் காயம் அடைந்த சத்தியா மற்றும் விஜயா ஆகிய இரண்டு பெண்களும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து கெங்கவல்லி வட்டாட்சியர் வெங்கடேசன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து வருகிறார். இந்த வெடி விபத்து சம்பவம் குறித்து கெங்கவல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.