தவெக அரசுக்கு சிபிஎம் திடீர் எச்சரிக்கை: இதை செய்தால் ஆதரவை மறுபரிசீலனை செய்வோம்..!
திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் ஆளுங்கட்சியான திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுக்கும் எதிராகத்தான் மாற்று சக்தியாக உருவெடுத்த தவெகவிற்கு வாக்களித்துள்ளனர். மக்களின் இந்தத் தீர்ப்பை மதித்து, ஜனநாயகத்தைக் காக்கத்தான் நாங்கள் தவெக அரசுக்கு ஆதரவளித்தோம். ஆனால், தற்போதைய அரசியல் சூழல் வேறு திசையில் நகர்கிறது என்று கவலை தெரிவித்தார்.
அண்மையில் அதிமுகவில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏ-க்கள் குழு தவெக அரசுக்கு ஆதரவளிப்பதாக அதிரடியாக அறிவித்தது.இதுகுறித்து சிபிஎம் சண்முகம் பேசுகையில்,
அதிமுகவை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வது என்பது மக்கள் தீர்ப்புக்கு எதிரானது. நல்லாட்சி தருவேன் என்று கூறியதற்கு விரோதமாக இது அமைந்து விடும். அதிமுக திமுகவுக்கு எதிராகத்தான் தவெகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள். அத்தகைய கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைப்பது என்பது மக்களின் தீர்ப்புக்கு எதிராக அமையும். அத்தகைய நிலைக்கு அவர்கள் செல்ல மாட்டார்கள் என நம்புகிறேன். மீறி, அதிமுகவின் ஆதரவை அவர்கள் பெறுவார்கள். ஆனால் எங்களுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய நேரிடும்
ஒருவேளை சி.வி. சண்முகம் தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை தவெக அதிகாரப்பூர்வமாகப் பெற்றால், விஜய் அரசுக்கு நாங்கள் வெளியிலிருந்து அளித்து வரும் ஆதரவை சிபிஎம் மாநிலக் குழு உடனடியாக அமர்ந்து மறுபரிசீலனை செய்யும்.தவெகவின் அடுத்தகட்ட நகர்வுகளைப் பொறுத்தே இடதுசாரிகளின் ஆதரவு நீடிக்குமா என்பது தெரியும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சிபிஎம் கட்சியின் இந்த திடீர் எச்சரிக்கை காரணமாக, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்குத் தற்போது புதிய அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

