"கன்னட மக்கள் பாதிக்கப்பட்டால் கர்நாடக அரசு வாயை மூடிக்கொண்டு வேடிக்கைதான் பார்க்குமா?"- சண்முகம்
வேறு மாநிலங்களில் கன்னட மொழி பேசும் மக்கள் பாதிக்கப்பட்டால் கர்நாடக அரசு வாயை மூடிக்கொண்டு வேடிக்கைதான் பார்க்குமா என்பதை விளக்க வேண்டுகிறோம் என சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார்.
இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் தனது எக்ஸ் தளத்தில், “கர்நாடக மாநிலத்தில் மூன்று தமிழர்கள் வனத்துறையினரால் கொல்லப்பட்டது தொடர்பாக தமிழகம் தலையிடக் கூடாது என்று கர்நாடக முதலமைச்சர் திரு. டி. கே. சிவக்குமார் கூறியிருப்பதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். உலகில் தமிழ் மக்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு நியாயமும் நீதியும் கிடைக்கக் குரல் கொடுப்பது தமிழ்நாடு தலைவர்கள் மற்றும் அரசின் கடமையாகும்.
இக்கொலை சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்த தமிழ்நாட்டு முதல்வரை, "உங்கள் வேலையைப் பாருங்கள்" என்று கர்நாடக முதல்வர் கடுமையான வார்த்தைகளில் கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. வேறு மாநிலங்களில் கன்னட மொழி பேசும் மக்கள் பாதிக்கப்பட்டால் கர்நாடக அரசு வாயை மூடிக்கொண்டு வேடிக்கைதான் பார்க்குமா என்பதை விளக்க வேண்டுகிறோம். கர்நாடக நிர்வாகத்தில் தமிழ்நாடு தலையிடுவதாகப் பிரச்சனையைத் திசை திருப்புவதை விடுத்து, கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதில் கர்நாடக அரசு கவனம் செலுத்தட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

