“கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கக் கூடாது”- சி.பி.ஐ (எம்) கடும் கண்டனம்
தவெக பிரச்சாரத்தின் போது இறந்தவர்கள் என்பதால், டி.வி.கே அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வேலைவாய்ப்பை வழங்குகிறதா? என சிபிஐஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
![]()
இதுதொடர்பாக சண்முகம் தனது எக்ஸ் தளத்தில், “தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ச.ஜோசப் விஜய் அவர்கள் ஏற்கனவே கரூர் வருகை தந்திருந்தபோது, அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சோக சம்பவம் நடந்தது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்போவதாகத் தமிழக அரசு தற்பொழுது அறிவித்துள்ளது. தவெக பிரச்சாரத்தின் போது இறந்தவர்கள் என்பதால், தவெக அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வேலைவாய்ப்பை வழங்குகிறதா என்கிற நியாயமான கேள்வி முன் வருகிறது. மேலும், 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. அதற்குள் இப்படியான அறிவிப்புகள் வெளியாவது, வழக்கின் தன்மையை நீர்த்து போக செய்யும்.
சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி பொறுப்பேற்று, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவது என்பது வேறு, அரசு வேலை வழங்குவது என்பது முற்றிலும் வேறானது. எனவே, பல்வேறு முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் அரசு வேலை வழங்குவது தொடர்பாக முறையான ஒரு பொது வழிகாட்டுதலை (Guidelines) அரசு உருவாக்க வேண்டும். அதுவரை, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேலை வழங்கும் அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

