மோதலை உருவாக்க பாஜக திட்டமிட்ட சதி முறியடிக்கப்பட்டுள்ளது - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அறிக்கை!

 
protest

தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்களுக்கும் தமிழர்களுக்குமான மோதலை உருவாக்க பாஜக திட்டமிடது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 

இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பல லட்சம் பேர் வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறைவான கூலி, அதிகப்படியான வேலை உள்ளிட்ட மோசமான சுரண்டலுக்கு இத்தொழிலாளர்கள் உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். தமிழக முதலமைச்சர் பிறந்த நாள் விழாவில் பீகார் துணை முதலமைச்சர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்ததும், தேசிய அளவில் பிஜேபியை எதிர்த்து ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு அறைகூவல் விட்ட நிலையில் இதனை சீர்குலைக்கும் வகையில் தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் குறிப்பாக பீகாரிகள் தாக்கப்படுவதாகவும். 12 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தரம் தாழ்ந்த உண்மைக்கு மாறான பிரச்சாரத்தை கிளப்பிவிட்டு, பதட்டமான நிலையை உருவாக்கினார்கள். பீகார் சட்டமன்றத்தில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் இப்பிரச்சனையை கிளப்பி கலகம் செய்துள்ளனர். 

மோசமான வீடியோக்களும், பத்திரிக்கை செய்திகளும் வெளியிடப்பட்டுள்ளன. இதனால், கலக்கமடைந்த வெளி மாநில தொழிலாளர்கள் அச்சத்துடன் காவல் நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் குவியலாக திரண்டனர். தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்களுக்கும் தமிழர்களுக்குமான மோதலை உருவாக்க பாஜக திட்டமிட்டு செயலாற்றியது. செய்தி அறிந்தவுடன் தமிழக முதல்வர் கண்டித்து விரிவாக அறிக்கை விட்டதும், காவல்துறை மற்றும் அரசு அனைத்துத் துறை அதிகாரிகளையும், மாவட்ட நிர்வாகங்களையும் முடிக்குவிட்டு புலம்பெயர் தொழிலாளர்களை நேரடியாக சந்தித்து கலந்துரையாடல் நடத்தி இந்த தவறான பிரச்சாரத்திற்கு ஆளாக வேண்டாமென எடுத்துச் சொல்லி அமைதியான நிலை உருவாக்கப்பட்டது. 

வதந்தி பரப்பிய சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாலை மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்திலிருந்து வந்த அதிகாரிகள் குழு தமிழக அதிகாரிகள் மற்றும் பீகார் தொழிலாளர்களை சந்தித்து தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் வட மாநில தமிழக தொழிலாளர்கள் மக்கள் மத்தியில் மோதலை உருவாக்க பாஜக திட்டமிட்ட சதி முறியடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.