நாளை தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்) மறியல் போராட்டம்
மோடி ஆட்சியின் வரலாறு காணாத விலைவாசி உயர்வை கண்டித்தும், அனைவருக்கும் வேலை வழங்க வலியுறுத்தியும், நாளை (7.9.2023) தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்) மறியல் போராட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சிபிஐ (எம்) அலுவலக செயலாளர் ராஜசேகரன், “மோடி ஆட்சியின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளையும், வரலாறு காணாத விலைவாசி உயர்வை கண்டித்தும், அனைவருக்கும் வேலை வழங்கிட வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் நாளை (07.09.2023) ரயில் மற்றும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இப்போராட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 1 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.
தென்சென்னை மாவட்டக்குழு சார்பில், நாளை காலை 10.30 மணிக்கு கிண்டி ரயில் நிலையத்தில் நடைபெறும் மறியலில் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாவட்ட செயலாளர் ஆர். வேல்முருகன் உள்ளிட்டு ஆயிரக்கணக்கான தோழர்கள் பங்கேற்கின்றனர். வடசென்னை மாவட்டக்குழு சார்பில், நாளை காலை 10.30 மணிக்கு மூலக்கடை, யூகோ வங்கி முன்பு நடைபெறும் மறியலில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் எல். சுந்தரராஜன் மற்றும் தலைவர்கள் பங்கேற்கின்றனர். திருவொற்றியூர் தபால் நிலையம் முன்பு 10.30 மணிக்கு நடைபெறும் மறியலில் மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி பங்கேற்கிறார்.
மத்திய சென்னை சார்பில் நாளை காலை 10.30 மணிக்கு அண்ணாசாலையில் உள்ள தபால் நிலையம் முன்பு நடைபெறும் மறியலில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத், மாவட்ட செயலாளர் ஜி. செல்வா உள்ளிட்டு தோழர்கள் பங்கேற்கின்றனர். மேற்கண்ட நிகழ்ச்சியில் தங்களின் மேலான பத்திரிகை / தொலைக்காட்சி / ஊடகங்கள் சார்பில் நிருபர்களை அனுப்பி வைத்து செய்தி சேகரித்து வெளியிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.