நிர்மலா சீதாராமன் தமிழக மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்: முத்தரசன்

 
mutharasan

ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

மீனவர்களை காக்க உறுதியான நடவடிக்கை வேண்டும்:முத்தரசன் வலியுறுத்தல்

இதுதொடர்பாக முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நேற்று (12.09.2024) கோவை நகரில் உள்ள கொடிசியா கூட்ட அரங்கில் முதலீட்டாளர்களை சந்தித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அன்னபூர்ணா  உணவக உரிமையாளர்  ஜிஎஸ்டி வரி ஏழை மக்கள் பகுதியினரையும், உணவகம் போன்ற சிறு தொழில் செய்பவர்களையும் எப்படி பாதிக்கிறது என்பதை எளிய முறையில் எடுத்துக் கூறி, ஜிஎஸ்டி வரி விதிப்பில் உள்ள முரண்பாடுகளை சீரமைத்து, சிறு வணிகம் மற்றும் தொழில் பிரிவுகளுக்கு முற்றிலும் விலக்களிக்க வேண்டும் என முறையிட்டுள்ளார். இந்தப் பொது நிகழ்வு  சமூக ஊடகங்களில் விரிவாக பரவி நாட்டின் கவனத்தை ஈர்த்தது. அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சுட்டிக்காட்டிய ஜிஎஸ்டி வரிவிதிப்பால் நாடு முழுவதும் பாதிக்கப்படும் லட்சக்கணக்கான சிறு, குறு, நடுத்தர தொழில் முதலீட்டாளர்கள், அன்னபூர்ணா உணவக உரிமையாளர் முறையீட்டை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி கருத்துக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்தனர். 

இந்த நிலையில் ஒன்றிய நிதியமைச்சர், அவரது ஆதரவாளர்கள், அதிகார வர்க்கத்தினர் அன்னபூர்ணா உணவக உரிமையாளரை தனியாக, நிதியமைச்சர் தங்கியிருந்த இடத்திற்கு அழைத்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். ஒன்றிய நிதியமைச்சரின் கலந்தாலோசணைக் கூட்டம் எதற்காக நடத்தப்பட்டது? அங்கு நியாயமான கோரிக்கையை எளிய முறையில் விளக்கி முறையிட்டது குற்றமா? முறையீடு குறித்து வாய் திறக்காத நிதி அமைச்சர், தவறான வரி விதிப்பை திருத்தியமைக்க முன் வராமல்,   முறையிட்டவரை தனித்து அழைத்து மன்னிப்பு கேட்க வைத்தது அதிகார ஆணவத்தின் உச்சமாகும். பங்கு சந்தை வணிகத்தை ஒழுங்குமுறை படுத்தும்  செபி நிறுவனத்தின் தலைவரும், அவரது வாழ்க்கை இணையரும் அதானி நிறுவனத்துடன் இணைந்து செய்துள்ள முறைகேடு பற்றி எழுந்துள்ள புகார் குறித்து வாய் திறக்காத நிதியமைச்சர், சாதாரண உணவக உரிமையாளரை மிரட்டி மன்னிப்புக் கேட்க வைத்ததை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன், ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களையும் அவமானப்படுத்திய ஒன்றிய நிதியமைச்சர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.