“பிரவீன் சக்கரவர்த்தியின்செயல் அதிக பிரசங்கித்தனம்! நாங்க திமுக கூட்டணியில் தொடர்கிறோம்” - முத்தரசன்

 
மீனவர்களை காக்க உறுதியான நடவடிக்கை வேண்டும்:முத்தரசன் வலியுறுத்தல்

பிரவீன் சக்கரவர்த்தி பதிவுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் அந்த கூட்டணியில் இல்லை என CPI முன்னாள் மாநிலச் செயலாளர் முத்தரசன்  கூறியுள்ளார்.

Q


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்தப் போதிலும், ஆட்சியமைக்கத் தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை கிடைக்கவில்லை. இந்த நிலையில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய், கடந்த மே 10- ஆம் தேதி முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். இது ஒருபுறம் இருக்க, சட்டமன்றத் தேர்தலில் மயிலம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுகவின் சி.வி.சண்முகம் ,தனது மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் மாநிலங்களவையில் தமிழகத்திற்கு ஒரு சீட் காலியானது. காங்கிரஸ் கேட்டுக்கொண்டதன் பேரில் மாநிலங்களவை பதவிக்கான இடம் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதன்பேரில், காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அந்த இடத்திற்கு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பிரவீன் சக்கரவர்த்தி இன்று தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழக வெற்றிக் கழகம்+ காங்கிரஸ்+விடுதலைச் சிறுத்தைகள் கட்சி+ இந்திய யூனியன் முஸ்லிம் லீக்+ இந்திய கம்யூனிஸ்ட் கட்சி+ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அடங்கிய தமிழ்நாடு சமூகநீதி முற்போக்குக் கூட்டணியின் முதல் எம்.பி. வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதைபெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.


பிரவீன் சக்கரவர்த்தி பதிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள CPI முன்னாள் மாநிலச் செயலாளர் முத்தரசன், “ பிரவீன் சக்கரவர்த்தி பதிவுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. 
நாங்கள் அந்த கூட்டணியில் இல்லை. பா.ஜ.க  ஆட்சி வந்து விட கூடாது என்பதற்காக த.வெ.கவிற்கு வெளியிலிருந்து தான் ஆதரவு அளிக்கிறோம். இடதுசாரிகள் பெயரையும் குறிப்பிட்டு தமிழ்நாடு சமூகநீதி முற்போக்கு கூட்டணி என காங், பிரவீன் சக்கரவர்த்தி பதிவிட்டிருக்கிறார். பிரவீன் சக்கரவர்த்தியின்செயல் அதிக பிரசங்கித்தனம். திமுக தலைமையிலான கூட்டணியில் தான் தொடர்கிறோம்,அதே நிலைதான் தொடர்கிறது” என்றார்.