ஒன்றிய அரசுக்கு CPI(M) எம்பி கடும் எச்சரிக்கை..!!
ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டத்திற்கு இன்று அழைப்பு விடுத்துள்ள நிலையில்,போராட்டம் நடத்த குவிந்து வரும் இளைஞர்களை உடனுக்குடன் கைது செய்து காவல்துறை அப்புறப்படுத்தி வருகிறது. CJP-யின் போராட்டத்தை முன்னிட்டு நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எம்.பி-யான ஜான் பிரிட்டாஸ் ஒட்டுமொத்த டெல்லி நகரமும் அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
நகரில் போடப்பட்டுள்ளவை வெறும் சாலைத் தடுப்புகள் அல்ல, இது நகரம் முற்றுகையிடப்பட்டிருப்பதைப் போன்ற ஒரு சூழலாக தெரிகிறது. என்னைப் போன்ற ஒரு நாடாளுமன்ற உறுப்பினரால் கூட டெல்லி வீதிகளில் சுதந்திரமாகப் பயணிக்க முடியவில்லை. குறைந்தது 6 இடங்களில் நான் தடுத்து நிறுத்தப்பட்டேன். பாதுகாப்புப் படையினரிடம் எனது அடையாள அட்டைகளை எடுத்து எடுத்து காட்டி கொண்டிருக்கிறேன்.
இதுதான் ஜனநாயகமா..? இங்கே என்னதான் நடக்கிறது? போரை எதிர்கொள்ளும் ஒரு நாட்டில் கூட இத்தகைய சூழல் நிலவும் என்று நான் நினைக்கவில்லை. இந்த ஒன்றிய அரசுக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன்; அவர்கள் இதுபோன்ற அடக்குமுறை நடவடிக்கைகளைத் தொடர்ந்தால், இந்தப் போராட்டம் அவர்களை வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசும் வகையிலான ஒரு மாபெரும் போராட்டமாக மாறும் என்று எச்சரித்தார்.

