எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

கரூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஒரு நாள் வாங்கல் காவல் நிலைய கஸ்டடி விசாரணைக்கு நீதிபதி பரத்குமார் அனுமதி வழங்கி உத்தரவிட்டார். ஏற்கனவே, எம்ஆர் விஜயபாஸ்கரை கடந்த 2 நாட்கள் கஸ்டடி விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார் அவரை மீண்டும் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் இன்று ஆஜர்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், வாங்கல் காவல் நிலையத்தில் எம்.ஆர் . விஜயபாஸ்கர் மீது பதியப்பட்ட வழக்கில் 7 நாட்கள் காஸ்டடி விசாரணைக்கு அனுமதி கேட்கப்பட்ட நிலையில், 1 நாள் போலீஸ் கஸ்டடி விசாரணைக்கு அனுமதி வழங்கி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் - 2 (பொ) நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டுள்ளார்.
கரூரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் மூலம் பத்திர பதிவு செய்துள்ளதாக மேலக் கரூர் சார் பதிவாளர் முகமது அப்துல்காதர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், கடந்த 16-ம் தேதி கேரளா மாநிலம் திருச்சூரில் சிபிசிஐடி போலீசார் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் பிரவீன் ஆகிய இவரை கைது செய்து, கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவுப்படி எம்.ஆர்.விஜயபாஸ்கரை 15 நாட்கள் திருச்சி மத்திய சிறையிலும், பிரவீனை குளித்தலை கிளை சிறையிலும் அடைத்தனர். இந்த வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கரூர் குற்றவியல் நடுவர் மன்றம் நேற்று முன்தினம் அனுமதி வழங்கியது. இதையடுத்து 2 நாள் விசாரணைக்குக் பிறகு எம்.ஆர். விஜயபாஸ்கரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த நிலையில், நிலத்தை பறிகொடுத்த பிரகாஷ் கரூர் - வாங்கல் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 22-ம் தேதி அளித்த புகாரின் அடிப்படையில் எம். ஆர் விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர் மற்றும் பிரவீன் உட்பட 13 பேர்கள் மீது 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர். வாங்கல் காவல் நிலைய போலீசார் எம் ஆர் விஜயபாஸ்கரை போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, எம்.ஆர்.விஜயபாஸ்கரை 1 நாட்கள் வாங்கல் போலீசார் கஸ்டடியில் விசாரிக்க நீதிபதி பரத்குமார் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.