சொத்து குவிப்பு வழக்கு- தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரனுக்கு ஐகோர்ட் செக்

சொத்து குவிப்பு வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு குறித்து பதிலளிக்கும்படி அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் லஞ்ச ஒழிபுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006-2011ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, வருமானத்துக்கு அதிகமாக 76 லட்சத்து 40 ஆயிரத்து 433 ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை, அவர் மீதும், அவரது மனைவி மணிமேகலை மீதும் வழக்குப்பதிவு செய்தது.
கடந்த 2012ம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த மனுவை ஏற்று, அவரையும், அவரது மனைவி மணிமேகலையையும் வழக்கில் இருந்து விடுவித்து கடந்த 2022 ம் ஆண்டு உத்தரவிட்டது.
இதேபோல, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை, 44 லட்சத்து 56 ஆயிரத்து 67 ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்திருந்தது. கடந்த 2012ம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கும், ஸ்ரீவில்லிபுத்தூரில் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், வழக்கில் இருந்து விடுவிக்க கோரி கே கே எஸ் எஸ் ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை ஏற்று அவர்களை விடுவித்து கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது.
விடுவிப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து சீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்துள்ளார். வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, லஞ்ச ஒழிப்புத் துறையினரின் விளக்கங்களை கேட்காமல் ஏதேனும் உத்தரவு பிறப்பித்தால் அது அதிகாரிகளை களங்கப்படுத்தியதாகி விடும் எனவும் விசாரணை நடைமுறையில் எந்த தவறும் இல்லை ,முறையாக நடைபெற்றதாக குறிப்பிட்டார். அதற்கு, வழக்கில் பதிலளிக்க மட்டுமே உத்தரவிடப்படுகிறது என்றும் எந்த இறுதி உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.
வழக்குகள் நடத்தப்படும் விதம் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளதாகவும் குறிப்பிட்ட நீதிபதி, இந்த வழக்குகள் தொடர்பாக செப்டம்பர் 20ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோருக்கும், லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.