#BREAKING ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் கார் மூழ்கி தம்பதி பலி
சேலம் அருகே ஓமலூர் பகுதியில் உள்ள ரயில்வே தரைப்பாலத்தில் நேற்று பெய்த மழையில் தேங்கி இருந்த நீரில் , கார் மூழ்கியதால் சேலத்தைச் சேர்ந்த வெங்கடாஜலம் மற்றும் மனைவி ராதா ஆகிய இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர்.

சேலம் மாவட்டத்தில் நேற்று இரவு 7 மணி அளவில் ஓமலூர், காடையாம்பட்டி , முத்துநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக பல்வேறு ரயில்வே தரைப் பாலங்களிலும் தண்ணீர் தேங்கியது. இந்த நிலையில் இன்று காலை சேலம் மாநகர், சின்ன திருப்பதி பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக அலுவலர் வெங்கடாசலம்(73) மற்றும் அவருடைய மனைவி ராதா(64) ஆகியோர் , ஓமலூர் அருகே செம்மாண்டப்பட்டி பகுதியில் உள்ள தங்களது உறவினர் வீட்டு நிச்சயதார்த்தத்திற்கு சென்று விட்டு , பின்னர் காலை 7 மணி அளவில் சேலம் திரும்பினர்.அப்போது செம்மாண்டப்பட்டி அருகே உள்ள ஏனாதி ரயில்வே தரைப்பாலம் வழியாக கடக்க முயன்ற போது , அந்தப் பள்ளத்தில் தேங்கியிருந்த மழை நீரில் கார் மூழ்கியது.
இதில் காருக்குள் இருந்த வெங்கடாஜலம் மற்றும் அவர் மனைவி ராதா ஆகிய இருவரும் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த ஓமலூர் போலீசார் தீயணைப்பு படையினரும் கயிறு கட்டி காரை வெளியே இழுத்து , பின்னர் இவரின் சடலங்களையும் எடுத்தனர். இதனை அடுத்து உடல் கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓமலூர் போலீசார், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

