பச்சிளம் குழந்தையை காட்டில் விட்டுச் சென்ற தம்பதி...காரணம் கேட்டா ஷாக் ஆயுடுவீங்க..!
ம.பி.,யின் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ளது நந்தன்வாடி கிராமம். ஊருக்கு வெளியே நெடுஞ்சாலையோரம் உள்ள வனப் பகுதியில் இருந்து செப்., 28ம் தேதி இரவு பச்சிளம் குழந்தை அழும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.அழுகுரல் வந்த திசையில் தேடியபோது, பாறைகளின் இடுக்கில் குழந்தை கிடப் பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
பசியிலும், எறும்பு கடியிலும் குழந்தையின் அ ழுகுரல், வனப்பகுதியின் அமைதியை கிழித்துக் கொண்டிருந்தது.
போலீசார் வந்து குழந்தையை மீட்டு மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தனர். இரவு முழுதும் எறும்புகள் கடித்தும், கொடூர குளிரையும் தாங்கிக் கொண்டு பச்சிளம் குழந்தை உயிருடன் இருந்தது அதிசயம் என்றே டாக்டர்கள் தெரிவித்தனர்.
மறுபுறம் விசாரணையை துவங்கிய போலீசார், பச்சிளம் குழந்தையை காட்டில் தனியே பரிதவிக்கவிட்ட பெற்றோரை தேடிப்பிடித்து கைது செய்துள்ளனர்.
அதிர்ச்சி இதில் அதிர்ச்சி என்னவெனில், பெற்றோர் இருவருமே அரசு துவக்கப் பள்ளி ஆசிரியர்கள். கணவர் பெயர் பப்லு, மனைவி பெயர் ராஜ குமாரி. மத்திய பிரதேச அரசு சட்டத்தின்படி இரு குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்களுக்கு அரசு வேலை பறிபோகும்.
இதனால், எங்கே வேலை பறிபோய்விடுமோ என்ற பயத்தில், நான்காவதாக பிறந்த இந்த குழந்தையை காட்டில் விட்டு விட்டு வந்ததாக கூறி, போலீசாரையே திணற வைத்திருக்கின்றனர்.

