விருதுநகரில் தனியார் பாரில் நாட்டு வெடிகுண்டு வீச்சு
ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் மதுபான கடையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் ஒருவர் காயமடைந்தார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூமாபட்டியில் இருந்து நெடுங்குளம் செல்லும் சாலையில் தனியார் மதுபான கடை அமைந்துள்ளது. காலை வழக்கம் போல் கடை திறந்து மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் அங்கு வந்த மர்ம நபர்கள் மது போதையில் மதுபான கடையின் வெளி சுவர் மற்றும் கடையின் உள் சுவர் என 3 இடங்களில் நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இந்த சம்பவத்தில் கடையில் வேலை பார்க்கும் மாயன் (34) என்பவர் காயம் அடைந்தார்.சம்பவம் குறித்து உடனடியாக கூமாபட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்தனர். பின்னர் கடை உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு தப்பி ஓடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாட்டு வெடிகுண்டு எதற்காக மதுபான கடையில் வீசப்பட்டது? வேறு ஏதும் காரணமா ? என போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.தனியார் மதுபான கடையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

