பெரும் பரபரப்பு! நாங்குநேரியில் நாட்டு வெடிகுண்டு வீச்சு!
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளரின் ஜெராக்ஸ் கடை மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நாட்டு வெடிகுண்டு மற்றும் பெட்ரோல் குண்டு வீசப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல ரவுடி கருக்கா வினோத் என்பவர் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதேபோல் சென்னையில் கோவில் ஒன்றின் முன்பும் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளரின் ஜெராக்ஸ் கடை மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வரும் அந்த நபர் ஜெராக்ஸ் கடை வைத்தும் நடத்தி வருகிறார். நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் ஜெராக்ஸ் கடை கண்ணாடி சேதமடைந்துள்ளது. மேலும் இரண்டு நாட்டு வெடி குண்டுகள் வெடிக்காத நிலையில், கடையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.