தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 30ல் தொடங்கும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..
எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 30ம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவ இடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக கடந்த 06.06.2025 முதல் 29.6. 2025 வரை பெறப்பட்டு வந்தது. இந்த ஆண்டு 72, 743 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இது கடந்த ஆண்டை விட 29, 680 விண்ணப்பங்கள் கூடுதலாகும் . மாணவர்களின் சிரமங்களை குறைக்கிற வகையிலும், சரிபார்ப்பு பணிகள் சிறப்பாக நடைபெறும் வகையிலும் இந்த ஆண்டு அதிக கால அவகாசம் வழங்கப்பட்டது. இதனால் அதிக அளவிலான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் போலியான சான்றிதழ்கள் கண்டறியப்பட்டு ஏற்கனவே 20 மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் , மேலும் ஐந்து மாணவர்கள் போலியான ஆவணங்களை சமர்ப்பித்தது தெரியவந்தது. இதனையடுத்து இந்த ஆண்டு 25 மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
சிறப்பு ஒதுக்கீட்டு விண்ணப்பங்களை பொருத்தவரை, 7.5% அரசு பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கீட்டின் கீழ் 4,681 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. விளையாட்டு பிரிவுக்கு 477 விண்ணப்பங்கள், முன்னாள் ராணுவவீரர்களின் வாரிசுகள் பிரிவு ஒதுக்கீட்டிற்கு 642விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தது . மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டு பிரிவின் கீழ் 148 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன . பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலித்து மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலும் மற்றும் 7.5% அரசு பள்ளி மாணவர்களை உள் ஒதுக்கீட்டிற்கான பட்டியலும் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.

2025 - 26 ஆம் கல்வியாண்டுக்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் சேர்க்கைக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பத்தை பொறுத்தவரை 43, 315 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. ஏற்றுக்கொள்ள தகுதி படைத்த விண்ணப்பங்கள் 39, 853 ஆகும். இதில் மாணவர்களை பொறுத்தவரை 13, 938 பேரும், மாணவிகளை பொறுத்தவரை 25, 855 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
7.5% விண்ணப்பங்களை பொறுத்தவரை 2025 - 26 ஆம் கல்வி ஆண்டிற்கான உள்ள ஒதுக்கீட்டிற்கான மருத்துவ மற்றும் பல் மருத்துவம் சேர்க்கைக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட விண்னப்பங்களின் எண்ணிக்கை 4, 281. அதில் தகுதி படைத்த விண்ணப்பங்கள் 4,062 ஆகும். இதில் 1,136 மாணவர்களும் 2,926 மாணவிகளும் அடங்குவர்.
நிர்வாக ஒதுக்கீட்டிற்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள் :
சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கான மேனேஜ்மென்ட் கோட்டா என்று சொல்லக்கூடிய நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 33,692. இதில் தகுதி படைத்த விண்ணப்பங்கள் 30,428 ஆகும். இவர்களில் 9,737 மாணவர்களும், 18,548 மாணவிகளும் அடங்குவர்.

தமிழ்நாடு அரசு மாநில ஒதுக்கீட்டிற்கான இடங்களை பொருத்தவரை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள ஒட்டுமொத்த எம்பிபிஎஸ் இடங்கள் 6,600. அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள் மொத்த பிடிஎஸ் மருத்துவ இடங்கள் 1,583.
7.5 சதவிகித ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநதி கல்லூரிகளில் உள்ள மொத்த எம்பிபிஎஸ் இடங்கள் 495 . ஏழரை சதவீத ஒதுக்கீட்டிற்கான அரசு மருத்துவக் கல்லூரியில் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த பிடிஎஸ் இடங்கள் 119.
விளையாட்டு பிரிவு ஒதுக்கிட்டை பொருத்தவரை சுயநிதி கல்லூரிகளில் உள்ள மொத்த எம்.பி.பி.எஸ் இடங்கள் 1,144. சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள பிடிஎஸ் மருத்துவ இடங்கள் 515. இதேபோல் என்.ஆர்.ஐ ஒதுக்கீட்டில் சுயநதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ் இடங்கள் 592 ஆகும், என்.ஆர்ஐ ஒதுக்கீட்டில் சுயநிதி பல் மருத்துவ கல்லூரியில் உள்ள பிடிஎஸ் பல் மருத்துவ இடங்கள் 15 ஆகும்” என்று அறிவித்தார்.


