புத்தக கொள்முதலில் 3 ஆண்டுகளாக ஊழல் - லஞ்ச ஒழிப்புத்துறை

 
புத்தக கொள்முதலில் 3 ஆண்டுகளாக ஊழல் - லஞ்ச ஒழிப்புத்துறை 

கடந்த மூன்று ஆண்டுகளாக நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) தெரிவித்துள்ளது.

கோவை பெரியார் அறிவுலக நூலகம் உட்பட 6 மாவட்டங்களில் உள்ள நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டி பள்ளிக் கல்வித்துறை சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கினர். முதற்கட்டமாக பொது நூலகத்துறையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத அரசு அலுவலர்கள் மீது கடந்த 07.11.2026 அன்று விரிவான விசாரணை பதிவு செய்யப்பட்டு, புத்தகக் கொள்முதல் தொடர்பான விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. விசாரணையின் ஒரு பகுதியாக ஒரே நேரத்தில் 7 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.


இதனிடையே கோவை பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் முறைகேடு விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புதுறை வழக்குப்பதிவு செய்யக்கோரி திமுக சட்டப்பிரிவு இணைச் செயலாளர் பரந்தாமன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், "நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வதில் கடந்த மூன்று ஆண்டுகளாக முறைகேடு நடந்துள்ளது. முறைகேட்டில் மேலும் இரு பதிப்பகங்களுக்கு தொடர்புள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மனுதாரர் பரந்தாமனின் வாக்குமூலத்தை பதிவு செய்ய தயார்.  முறைகேடு தொடர்பாக தகவலறிந்தவர்கள் முன்வந்தால் அவர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் எனக் கூறியுள்ளது.