"வரி கட்டுறியா?.. வாசல்ல குழியை தோண்டவா?"- மாநகராட்சி ஊழியர்கள் அடாவடி

வீட்டு வரி செலுத்தாதவரின் வீட்டு வாசலில் பள்ளம் தோண்டிய மாநகராட்சி ஊழியர்களால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட கடலூரில் மாநகராட்சிக்கு சேர வேண்டிய பல்வேறு வரியை வசூலிக்க அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று கடலூர் இம்பிரியல் சாலையில் உள்ள ஒரு ஹோட்டல் முன்பு குப்பை வாகனத்தை நிறுத்திவிட்டு வரி கொடுத்தால் மட்டுமே குப்பை வாகனம் அகற்றப்படும் என கூறினார்கள்.இதேபோல் இன்று கடலூர் வரதராஜன் நகரில் உள்ள ஒரு வீட்டில் 42,000 பாக்கி சொத்து வரி கேட்டு மாநகராட்சி ஊழியர்கள் சென்றுள்ளார்கள். அப்போது அந்த வீட்டில் கடந்த ஐந்தாண்டு காலமாக வசிக்கும் செந்தில்குமார் என்பவர் தான் வாடகைக்கு இருந்து வருவதாகவும் வாடகை பணத்தை உரிமையாளருக்கு செலுத்தி விட்ட நிலையில் வீட்டு உரிமையாளரே வரியை செலுத்த வேண்டும் நீங்கள் அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார். ஆனாலும் மாநகராட்சி ஊழியர்கள் அவர் சொல்வதைக் கேட்காமல் ஜேசிபி இயந்திரத்தை வரவைத்து செந்தில்குமார் வீட்டின் முன்பு பெரிய பள்ளத்தை தோண்டினார்கள். இதனை அடுத்து செந்தில்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத சூழல் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து செந்தில்குமார் கடலூர் புதுநகர் காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்ததுடன் காவல் நிலையத்திற்கு வந்து மாநகராட்சி ஊழியர்கள் மீது புகார் மனு கொடுத்துள்ளார். வீட்டு வரியை வீட்டு உரிமையாளரிடம் வசூலிக்காமல் தன்னிடம் வந்து கேட்டதும், மனித உரிமை மீறும் வகையில் வீட்டிற்கு முன்பு பள்ளம் தோண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார். வீட்டு வரி செலுத்தாதவரின் வீட்டின் முன்பு பள்ளம் தோண்டிய சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.