மாரடைப்புகளுக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல - மத்திய அரசு
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் டாக்டர் மனிஷா வர்மா தலைமையிலான 10 பேர் கொண்ட தேசிய ஊடகக் குழு, சென்னை மற்றும் புதுச்சேரிக்கு மேற்கொண்டுள்ள மூன்று நாள் ஊடகச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று (ஜூலை 2, 2025) சென்னை வந்தது. சுகாதார ஆராய்ச்சித் துறையின் கீழ் உள்ள முதன்மையான ஆராய்ச்சி அமைப்பான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் (ஐசிஎம்ஆர்-என்ஐஇ) விரிவான சுற்றுப்பயணம் மற்றும் கலந்துரையாடலுடன் இந்தக் குழு தங்கள் வருகையைத் தொடங்கியது.
நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் மனோஜ் முர்ஹேகர் ஊடகக் குழுவை வரவேற்று, தேசிய சுகாதாரக் கொள்கைகளை வடிவமைப்பதில் பங்களிக்கும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மற்றும் நிறைவடைந்த ஆராய்ச்சித் திட்டங்கள் குறித்து விளக்கினார். மூத்த விஞ்ஞானிகளுடன் டாக்டர் முர்ஹேகர், குழுவின் கேள்விகளுக்கு பதிலளித்து, பொது சுகாதார முன்னுரிமைகள் தொடர்பான ஆய்வுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். ஒரு குறிப்பிடத்தக்க சமீபத்திய ஆய்வை சுட்டிக்காட்டிய டாக்டர் முர்ஹேகர், இளைஞர்களிடையே திடீர் இதய இறப்புகள் பற்றி அதிகரித்து வரும் கவலையைப் பற்றிப் பேசினார். 2023 ஆம் ஆண்டில் ஐசிஎம்ஆர்-என்ஐஇ நடத்திய விரிவான ஆய்வைக் குறிப்பிட்டு, கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும் திடீர் மரணங்களுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று திட்டவட்டமாகக் கூறினார். மரபணு முன்கணிப்பு, அடிப்படை சுகாதார நிலைமைகள் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை போன்ற காரணிகள் இதுபோன்ற சம்பவங்களுக்கு பங்களிக்க அதிக வாய்ப்புள்ளது என்று அவர் மேலும் தெளிவுபடுத்தினார். இதை ஆதரித்து, சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓர் ஆய்வை அவர் குறிப்பிட்டார், இதன்படி, திடீர் இறப்பு விகிதம் - 10,000 இல் 1 என்ற வீதத்தில் கடந்த பத்தாண்டுகளில் நிலையாக உள்ளது.


