"கொரோனா பரிசோதனை முடிவுகளை உடனடியாக தெரிவிக்க வேண்டும்" - ஓபிஎஸ் வலியுறுத்தல்!!

 
ops mk stalin

கொரோனா பரிசோதனை முடிவுகளை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிமுக ஆட்சிக்காலத்தில் நிலையான செயல்பாட்டு முறைகளின்படி, என்னென்ன தெருக்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் இருந்தார்களோ,  அந்த தெருக்களிலெல்லாம் கிருமி நாசினி தெளிக்கப்படும்.  இதுதவிர பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அருகில் உள்ள வீடுகளின் வாயில்களில் பிளீசிங் பவுடர் போடுவதும், தண்ணீர் தேங்கி இடங்களில் கிருமிநாசினி தெளிப்பதும் ,கபசுரக் குடிநீர் அளிப்பதும்,  மாத்திரைகள் வழங்குவதும் நடைமுறையில் இருந்து வந்தது.  இது மட்டுமல்லாமல் அரசு அலுவலகங்களில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று கிருமி நாசினித் அளிக்கும் பணி நடைபெற்றது. அரசு போக்குவரத்து கழக பேருந்துகளும்,  கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டது.  இது நோய் தொற்றினை குறைக்க ஓரளவுக்கு உதவியது. ஆனால் இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிற சூழ்நிலையில்,  கிருமி நாசினி தெளித்து பிளீசிங் பவுடர் போடுவது போன்ற பணிகள் எதுவும் நடைபெறவில்லை என புகார்கள் மக்களிடமிருந்து வந்த வண்ணம் உள்ளன.

ops

இது மட்டுமல்லாமல் உள்ளாட்சி அமைப்புகளால் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனை முடிவுகள் வருவதற்கு இரண்டு மூன்று நாட்கள் ஆகின்றது.  இந்த இடைப்பட்ட காலத்தில் தொற்று இருக்காது என்ற எண்ணத்தில் பரிசோதனை மேற்கொண்டவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்ட  நிலையில்,  முடிவுகள் வேறு மாதிரியாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் உடன் தொடர்பில் உள்ளவர்களுக்கும் கொரோனா  தொற்று  உருவாக வாய்ப்பு உள்ளது.  இது தொற்று எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும்.  அதே சமயத்தில் தனியார் மருத்துவமனைகள் ஒரு சில நேரங்களில் முடிவுகள் தெரிவிக்கின்றன.  முடிவுகள் தாமதமாக அறிவிக்கப்படுவது மட்டும் அல்லாமல்கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு அதற்கான சான்றிதழ் தேவைப்படுவோருக்கு வழங்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.

ops

கொரோனா  நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கின்ற தருணத்தில், அரசு விழிப்புடன் இருந்து கிருமிநாசினி தெளிப்பது, பிளீச்சிங் பவுடர் போடுவது போன்ற பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும், கொரோனா  பரவலை தடுக்கும் வகையில் கொரோனா  பரிசோதனை முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்றும், தேவைப்படுவோருக்கு தொற்று இருக்கிறதா இல்லையா என்பதற்கான சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.  எனவே தமிழக முதல்வர் இதில் தனிக்கவனம் செலுத்தி கொரோனாவின் பாதிப்பை ஓரளவு கட்டுப்படுத்தும் வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பது, பிளீச்சிங் பவுடர் போடுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும், பரிசோதனை மேற்கொண்டவர்களுக்கு அதன் முடிவுகளை விரைந்து வழங்கவும்,  தேவைப்படுவோருக்கு சான்றிதழ் வழங்கவும்,  வழிவகை செய்ய வேண்டும் என்று அதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.