குட்கா முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல்!

தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இதுவரை 24 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கபட்டதாக தொடரப்பட்ட வழக்கை டெல்லி சிபிஐ போலீசார் விசாரித்து வருகின்றனர். இதில் ஏற்கனவே குடோன் உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்த சிபிஐ, இவர்களுக்கு எதிராக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் ஏற்கனவே உள்ள ஆறு பேருடன் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பி.வி.ரமணா, விஜயபாஸ்கர், காவல்துறை முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல்துறை ஆணையர் ஜார்ஜ், வணிக வரித்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி வகித்த எஸ்,கணேசன், சுகாதாரத்துறை அதிகாரிகளான டாக்டர். லக்ஷ்மி நாராயணன், பி.முருகன், மாநகராட்சி கவுன்சிலராக பதவி வகித்த ஏ.பழனி, கே.ஆர்.ராஜேந்திரன் உள்ளிட்ட 21 இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு கூடுதல் குற்றபத்திரிகையில் குற்றம் சாட்டபட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள எம்பி.எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சி. சஞ்சய் பாபா முன்பு நடைபெற்று வருகிறது. சிபிஐ தரப்பில் சுமார் 400 பக்கங்கள் கொண்ட கூடுதல் குற்றபத்திரிகை காகித வடிவிலும் 492 ஆவணங்கள் கொண்வற்றை பென்-ரைவ் மூலமாக நீதிமன்றத்தில் வழங்கபட்டது. மொத்தம் 27 பேரில் முருகன் என்பவர் இறந்துவிட்டதால் அவர் மீதான வழக்கு கைவிடப்பட்டது.மீதாமுள்ள 26 பேரில் இதுவரை 24 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று மீண்டும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா முன் விசாரணைக்கு வந்தது அப்போது குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் மட்டுமே குற்றபத்திரிகை நகல் பெறவில்லை. அவர்களை அடுத்த விசாரணைக்குள் குற்றபத்திரிகை நகல் பெற்றுக் கொள்ள வேண்டும் என நீதிபதி தெரிவித்து, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை நீதிபதி வரும் 16 தேதிக்கு தள்ளிவைத்தார்.