மனிதநேயத்தின் உச்சம்: உயிரிழந்த பெண்ணின் உடலை 1 கி.மீ தோளில் சுமந்து சென்ற காவலர்!
ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டம் மந்திராலயம் பகுதியில், துங்கபத்ரா நதியில் மூழ்கி உயிரிழந்த பெண்ணின் உடலை, பாறைகள் மற்றும் சேறு நிறைந்த கரடுமுரடான பாதையில் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் தனது தோளில் சுமந்து சென்று மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவலரின் மனிதநேயச் செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
கர்நாடக மாநிலம் சாமராஜநகர் மாவட்டம் பாலாபள்ளியைச் சேர்ந்த ஜெயஸ்ரீ (41) என்ற பெண், தனது குடும்பத்தினருடன் மந்திராலயத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்திற்குச் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் குடும்பத்தினர் சொந்த ஊருக்குப் புறப்பட்ட நிலையில், ஜெயஸ்ரீ மட்டும் மடத்திலேயே தங்கியுள்ளார்.
மதிய வேளையில், தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக ஜெயஸ்ரீ குடும்பத்தினருக்குப் போன் செய்து கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக மந்திராலயம் போலிஸாரைத் தொடர்புகொண்டு பேரதிர்ச்சியோடு உதவி கேட்டுள்ளனர்.
தகவல் அறிந்ததும் மந்திராலயம் வட்ட ஆய்வாளர் (CI) மதுசூதன் ராவ், மடத்தின் புரோட்டோகால் அதிகாரியாகப் பணியாற்றி வரும் 2009-ஆம் பேட்ச் காவலர் ஜி. ரங்கா சுவாமியை எச்சரித்து, நதிக்கரைக்கு உடனடியாக விரையுமாறு உத்தரவிட்டார். குடும்பத்தினர் அனுப்பிய ஜெயஸ்ரீயின் புகைப்படத்தை மொபைலில் வைத்துக்கொண்டு, பாறைகள் நிறைந்த பாதையில் ஓடிய காவலர் ரங்கா சுவாமி, தேடுதல் வேட்டை தொடங்கிய 17 நிமிடங்களிலேயே நதியில் மிதந்த பெண்ணின் உடலைக் கண்டறிந்துள்ளார்.
"நானும் மற்றொரு காவலரும், உள்ளூர் மீனவர் ஒருவரும் இணைந்து உடலைக் கரைக்குக் கொண்டு வந்தோம். அவரது வயிற்றில் இருந்த நீர வெளியேற்ற CPR சிகிச்சையும் அளித்துப் பார்த்தோம். ஆனால், அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார். அப்பகுதியில் வழக்கமான ஆம்புலன்ஸ் வர தாமதமானதோடு, வெயில் அதிகமாக இருந்ததால் நாய்கள் உடலைச் சேதப்படுத்திவிடும் என பயந்தோம். இதனால், உடலை அங்கேயே விட்டுவிட மனமில்லாமல், எனது தோளிலேயே சுமந்துகொண்டு 1 கி.மீ தூரம் பாறைகள் மற்றும் சேற்று வழியே நடந்து வந்து ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன். அப்பெண்ணின் உயிரைக் காப்பாற்றியிருந்தால் இன்னும் மகிழ்ச்சியடைந்திருப்பேன்" என காவலர் ரங்கா சுவாமி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
காவலர் ரங்கா சுவாமியின் இந்தச் சுயநலமற்ற கடமையுணர்ச்சியையும் மனிதநேயத்தையும் காவல்துறை உயரதிகாரிகளும் பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
ஆந்திராவின் மந்திராலயத்தில் துங்கபத்ரா நதியில் விழுந்து உயிரிழந்த பெண்ணின் உடலை, பாறைகள் நிறைந்த கரடுமுரடான பாதையில் காவலர் ரங்கசுவாமி ஒரு கிலோமீட்டர் தூரம் தன் தோளிலேயே சுமந்து சென்று மனிதாபிமானத்துடன் மீட்டுள்ளார். #AndhraPradesh https://t.co/kdwV5KCRlj
— M.M.NEWS உடனடி செய்திகள் (@rajtweets10) October 13, 2026
ஆந்திராவின் மந்திராலயத்தில் துங்கபத்ரா நதியில் விழுந்து உயிரிழந்த பெண்ணின் உடலை, பாறைகள் நிறைந்த கரடுமுரடான பாதையில் காவலர் ரங்கசுவாமி ஒரு கிலோமீட்டர் தூரம் தன் தோளிலேயே சுமந்து சென்று மனிதாபிமானத்துடன் மீட்டுள்ளார். #AndhraPradesh https://t.co/kdwV5KCRlj
— M.M.NEWS உடனடி செய்திகள் (@rajtweets10) October 13, 2026

